வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. அவ்வளவு விண்ணப்பங்களையும் நிறுவன அதிகாரிகள் பொறுமையாக படித்துப் பார்த்து சரியானவர்களைத் தேர்வு செய்வது சாத்தியமானது இல்லை.
இப்போது கணினி மென்பொருள்கள், பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை எளிதாக்கியுள்ளன. அவற்றைப் பற்றிய தகவல்கள் தெரியாததால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தகுதியான இளைஞர்கள் கூட நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வராமல், அதற்கான காரணமும் தெரியாமல் சோர்ந்து போகும் நிலை ஏற்படுகிறது.kaninikkalvi.blogspot.in
ATS எனப்படும் Applicant Tracking System என்ற மென்பொருள்தான் இளைஞர்கள் பதிவேற்றம் செய்யும் வேலைக்கான விண்ணப்பங்களை முதலில் கையாள்கின்றன.
நிறுவனங்கள் அனைத்துமே தங்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை நுட்பமாக ஆராய்ந்து (Scan), தர வரிசைப்படுத்த இந்த மென்பொருள்களையே பயன்படுத்துகின்றன.
ஆன்லைனில் நாம் விண்ணப்பத்தை தயார் செய்யத் தொடங்கியவுடன், நம்முடைய சுய விவரங்களைப் பதிவுசெய்ய சில வழிகாட்டுதல்கள் கிடைக்கும். விண்ணப்பம் அனுப்புபவர் முதலில் தன்னுடைய தனிப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்த பிறகு, வேலைக்கான விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே நம்முடைய தகுதி, தொழில் அனுபவம், கல்வி ஆகியவற்றை நிறுவனத்தின் வேலை சார்ந்த தகவல்களுடன் பொருத்திப் பார்த்து நம்முடைய விண்ணப்பம் நேர்முகத் தேர்வுக்கு உகந்ததா? என்பதைத் தீர்மானிப்பதற்கான வேலையை ATS மென்பொருள் தொடங்கிவிடும்.
நம்முடைய விண்ணப்பம் ATS மென்பொருளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருந்தால், அதனால் தேர்வு செய்யப்பட்டு அடுத்ததாக வேலைவாய்ப்பு மேலாளரின் நேரடிப் பார்வைக்கு அது செல்லும். இல்லையென்றால், ATS மென்பொருளே நம்முடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிடும். உதாரணத்திற்கு, நம்முடைய பெயரும், தொடர்பு தகவல்களும் சரியான இடத்தில், சரியான விதத்தில் எழுதப்படவில்லை என்றால், ATS- அதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், நம் விண்ணப்பம் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகாமல் போகலாம்.
முக்கியமான செய்தி என்னவென்றால், Applicant Tracking System அனைத்து File formats-ஐயும் படித்து புரிந்து கொள்ள முடியாது. குறிப்பாக, தற்போது அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் pdf format-ஐ படிக்க முடியாது.
எனவே, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முன்பு ATS காட்டும் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றுவது அவசியம். ஒருவேளை ATS மென்பொருள் விண்ணப்பத்தை .doc format-இல் கேட்டால், அந்த வகையில் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். அதேபோல, அட்டவணைகள், பெட்டி தகவல்கள், பத்திகள் (Tables, text boxes, columns) போன்றவற்றை ATS மென்பொருளால் புரிந்து கொள்ள முடியாது. விண்ணப்பத்தில் இதுபோன்ற வடிவங்களில் தகவல்கள் இருந்தால், அவை விடுபட்டு போகும் வாய்ப்பு நிறைய உள்ளது. படங்கள், வரைபடங்கள் போன்றவையும் பிரச்னைக்குரியவையே. எனவே, இவற்றை தலைப்புகள், முக்கியப் பகுதிகள் அனைத்திலும் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான ATS மென்பொருள்களால் தலைப்பு மற்றும் அடிக்கோடிட்டவற்றை படிக்க முடியாது. சில Applicant Tracking System மிகத் திறமையானதாகவும், நவீன formats-களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. என்றாலும், அவை விண்ணப்பத்தில் உள்ள Border, lines, symbols போன்றவற்றை புரிந்து கொள்ளும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, அவற்றை அடியோடு தவிர்ப்பது நல்லது.
அதேபோன்று, விண்ணப்பத்தில் மிக முக்கியமான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களில் ஸ்பெல்லிங் தவறாக இருந்தால், அந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் ATS அவற்றைக் கடந்து சென்றுவிடும். எனவே, விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முன்பாக, நாமே ஒருமுறை ஸ்பெல்லிங்கை சரிபார்க்க வேண்டும். காரணம், martial என்பதற்குப் பதிலாக marital என நாம் எழுதியிருந்தால், கணினியின் ஸ்பெல் செக்கர் நம்மை எச்சரிக்காது.
வேலை தரும் நிறுவனங்கள் தங்கள் தொழில் சார்ந்த தகுதி, அனுபவம், கல்வித்தகுதி போன்றவற்றுக்கான keywords-ஐ ATS-இல் உள்ளீடு செய்திருக்கும். இந்த keywords-ஐயும், விண்ணப்பத்தில் உள்ள keywords-ஐயும் ATS பொருத்திப் பார்க்கும். இதில் அதிக அளவிலான keywords பொருந்திப்போகும் விண்ணப்பங்களையே ATS தேர்ந்தெடுத்து வேலை மேலாளருக்கு பரிந்துரைக்கும். இதனால், வேலை தலைப்புகள், கல்வித்தகுதி போன்றவற்றை குறிப்பிடும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்த பகுதிக்கேனும் அழுத்தம் கொடுக்க விரும்பினால், அந்த வார்த்தைகளை தடித்த (bold) எழுத்துகளில் காட்டலாம். அதேபோல, கவனத்தை ஈர்ப்பதற்கான வார்த்தைகளை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (caps) எழுதலாம். மேலும், Bullet Lists-ஐ பயன்படுத்தலாம். ஆனால் அம்புக்குறி போன்ற சிறப்பு வடிவங்களைப் பயன்படுத்தக்கூடாது. வழக்கமான Arial, Verdana போன்ற எழுத்துருக்களை 10 முதல் 12 என்ற அளவில் மட்டும் பயன்படுத்துவது நல்லது. விண்ணப்பத்தின் உள்ளடக்கத்தில் வண்ண எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம்.
விண்ணப்பத்தைத் தயார் செய்த பிறகு அது ATS-க்கு உகந்ததாக உள்ளதா, இல்லையா என்பதை இணையத்தில் உள்ள jobscan போன்ற போலி ATS மூலமாக (an ATS Simulator) பரிசோதித்துத் தெரிந்து கொள்ள முடியும். இதில் 80 சதவீதம் வரை நம் விண்ணப்பம் பொருந்திப் போனால், நாம் வேலை தேடும் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்துவிடலாம். 750 அல்லது அதற்கு குறைவான வார்த்தைகள் கொண்டவையே சிறந்த விண்ணப்பமாகக் கருதப்படுகின்றன