தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு! 27-06-2026 (பதிவு செய்த நாள்)
கோவா என்ற உடனே பலருக்கும் அது ஒரு சொகுசு உலகமாகத் தெரியலாம். ஆனால் நீங்கள் நினைக்கும் மாதிரி இங்கே அவ்வளவு எளிமையாக ஏமாறாமல் இருக்க முடியாது.
நீங்கள் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், முடிந்தவரை எப்படி பணத்தை மிச்சப்படுத்தி பயணம் செய்வது என இந்தப் பதிவில் கூறுகிறேன்.
முதல்ல கோவா எங்கே இருக்கு? எப்படிப் போகணும்?
கோவா இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில், மகாராஷ்டிராவிற்கும் கர்நாடகாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய மாநிலம்.
தமிழ்நாட்டிலிருந்து நேரடியாகக் கோவாவிற்கு ரயில்கள் குறைவு. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே 17316 (vasco-da-gama weekly express) வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் நாகப்பட்டினம்,தஞ்சாவூர்,திருச்சி,கரூர்,ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
பட்ஜெட் பயணிகளுக்கு மிக எளிய வழி பெங்களூருதான். 17309 பெங்களூரு (யஷ்வந்த்பூர்) ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 3:30 மணிக்கு vasco-da -gama (வாஸ்கோடகாமாவிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் அடுத்த நாள் காலை 5 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இறக்கி விடும். அதற்கு முன்னதாக இருக்கும் மட்கான் ரயில் நிலையத்தில் கூட இறங்கலாம். (இதுவும் கோவாவில் உள்ள முக்கிய ரயில் நிலையம் தான்)
மட்கான் ரயில் நிலையத்தில் மேலே IRCTC டார்மிட்டரி உள்ளது.அங்கேயே கூட தங்கிக் கொள்ளலாம். வெளியில் வந்தால் லாட்ஜ் மற்றும் ஹோம்ஸ்டேக்களும் உள்ளது.
டார்மிட்டரி வசதிகளும் உள்ளது.
ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் வாடகை பைக் வேண்டுமா என்று கேப்பார்கள். 800 ரூபாய் சொல்வார்கள். 600 ரூபாய்க்கு முடிக்கப் பாருங்கள்.முடிந்தவரை குறைத்துக் கேளுங்கள்.
தமிழ்நாட்டுச் சாப்பாடான இட்லி, தோசை அல்லது முறையான சாப்பாடு (Meals) இங்குத் தரமாகக் கிடைப்பது மிகக் கடினம். வட இந்திய உணவுகள் அல்லது மேற்கத்திய (Western) உணவுகள்தான் அதிகம். அதுவும் டூரிஸ்ட் ஸ்பாட்களில் ஒரு சாதாரண உணவின் விலை கூட உழைக்கும் மக்களின் ஒரு நாள் கூலிக்குச் சமமாக விற்கப்படுகிறது.
உள்ளூர் உணவு வாங்கினால் விலை குறைவாக இருக்கும்.
மற்ற மாநிலங்களைப் போல கோவாவில் அரசுப் பொதுப் போக்குவரத்து (Public Transport) வலுவாக இல்லை. நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக வேண்டுமென்றால், தனியார் டாக்சிகளையோ அல்லது சொந்தமாக ஸ்கூட்டர்களையோதான் வாடகைக்கு எடுக்க வேண்டும். இங்கு லோக்கல் ஆட்டோ மற்றும் டாக்சி மாஃபியா' மிக அதிகம். ஒரு சில கிலோமீட்டர்களுக்குக் கூட அநியாயக் கட்டணம் வசூலித்துச் சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்துவிடுவார்கள்.
தனி ஆளாக கோவா சென்றால் பட்ஜெட் எகிறிவிடும். இரண்டுப் பேர் அல்லது குழுவாக செல்லுங்கள். பைக் வாடகை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் ஹெல்மெட் ⛑️ அணிய வேண்டும். பொறுமையாக வண்டி ஓட்டுங்கள். மது போதையில் வாகனத்தை இயக்க வேண்டாம்.
வாட்டர் கேம்ஸ் எல்லாம் அக்டோபர் மாதம் தான் அதிகமாக இருக்கும்.மழைக்காலங்களில் சென்றால் இவை அதிகமாக இருக்காது.
முறையான திட்டமிடல் இருந்தால் கோவா பயணம் சிறப்பாக அமையும் நண்பர்களே ❤️
#tamilnadutogoa
#Goatripplan
#monsoontravel