Tuesday, 27 June 2017

பகலிலும் விளக்கு

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 

சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை.

இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு அவருக்கு புரிந்தது.பகலில் விளக்கு எரிவதால் பேட்டரியின் ஆயூள் காலம் குறையாது, எரிபொருளும் வீணாகாது என விற்பனையகத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.



இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தயாரான அனைத்து இருசக்கர வாகனங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. ஏஹெச்ஓ (All time Headlight On / Automatic Headlight On) எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கு ஒளிரும் நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் முகப்பு விளக்கு ஒளி உமிழும். இதை அணைக்க வாகன ஓட்டி நினைத்தாலும் முடியாது. இரவு நேரங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மட்டும்தான் முடியும். அதற்கான ஸ்விட்ச் மட்டுமே இருக்கும்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நிகழ்வது இரு சக்கர வாகனங்களால்தான். 2014-ம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர். 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு ஒளிர்வதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஏஹெச்ஓ தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனிமேல் இரு சக்கர வாகனங்களில் பகலில் விளக்கு எரிந்தால் கைகளால் சமிக்ஞை செய்து அவருக்கு உதவுவதாக நினைத்து செயல்பட வேண்டாம். விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது என்பது உணர்ந்து கொள்வதோடு இது கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இது எனது உண்மையான அனுபவமும் கூட.🌺🌺🌺🙏🙏🙏தகவலுக்காக-ஜெ.பாலசுந்தரம் ஆசிரியர்,புதுச்சேரி.🌺🌺🌺🙏🙏🙏

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...