இதுநாள் வரை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு என்.பி.எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
1871-ம் ஆண்டு முதல் இருந்துவந்த பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 01.01.2004 முதல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் புதிய பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை (NPS-National Pension System) நடைமுறைக்குக் கொண்டுவந்தது மத்திய அரசு.
ப.முகைதீன் ஷேக் தாவூது
பழைய பென்ஷனைத் தொடர்ந்தால் ஊழியர் கடைசியாக வாங்கிய சம்பள தொகையில் 50% தொகையை மாதம்தோறும் பென்ஷனாகத் தரவேண்டியிருக்கும். புதிய பென்ஷன் திட்டப்படி, ஊழியர்களே தமது சம்பளத்தில் 10% தொகையை பென்ஷனுக்காகச் செலுத்தி விடுவார்கள். அரசுத் தரப்பில் 10% தொகையைச் செலுத்தினால் போதும். இதனால், அரசுக்கு நிதிச்சுமை வெகுவாகக் குறையும் என்பதால், இந்தியாவின் 26 மாநிலங்கள் இந்தப் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றின. ஆனால், மேற்கு வங்கம் இன்றளவும் பழைய பென்ஷனைத் தொடர்கிறது. தமிழக அரசு 01.04.2003-லேயே சி.பி.எஸ் (CPS-Contributory Pension Scheme) எனும் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டது. சி.பி.எஸ் - என்.பி.எஸ். இரண்டுமே பங்களிப்பு பென்ஷன் திட்டம்தான் என்றாலும், பணப் பலனில் இரண்டும் வேறுபடுகின்றன. (பார்க்க, என்.பி.எஸ் Vs சி.பி.எஸ் அட்டவணை)
புதுப்பிக்கப்படும் புதிய பென்ஷன் திட்டம்... தமிழ்நாடு இணையுமா..?
மீண்டும் பழைய பென்ஷன்...
கடந்த 15 ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த பழைய பென்ஷன் கோரிக்கை, கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்ததும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்கள் மீண்டும் பழைய பென்ஷனுக்குத் திரும்பி விட்டன. இந்த நிலையில், பழைய பென்ஷன் கோரி போராடி வந்த மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள், சமீபத்தில் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த அந்த மாநில அரசு, ‘‘புதிய பென்ஷன் திட்டத்திலேயே பழைய பென்ஷனில் கிடைக்கும் பணப்பலனைத் தருவோம். இதற்குத் தேவையான தொகையை அரசு ஈடுகட்டும்’’ என்று வாக்குறுதி அளித் துள்ளது.
உத்தரவாத பென்ஷன் திட்டம்...
இதற்கிடையே ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ள உத்தரவாத பென்ஷன் திட்டம் மத்திய அரசையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்தத் திட்டம் என்ன வெனில், பழைய பென்ஷனுடன் புதிய பென்ஷனையும் கலந்து, புதிய திட்டம் ஒன்றை உருவாக்குவதுதான். அதாவது, என்.பி.எஸ் திட்டத்தில் 10% சம்பளத்தைச் செலுத்தும் ஊழியருக்கு, அவர் ஓய்வு பெறும்போது கிடைக்கும் பென்ஷன் அவரது கடைசிச் சம்பளத்தில் 33 சதவிகிதமாக இருக்கும். இதே ஊழியர் தனது சம்பளத்தில் 14% தொகையை பென்ஷன் பங்களிப்பாகச் செலுத்தி வந்தால், அவருடைய பென்ஷனானது கடைசி சம்பளத்தில் 40 சதவிகிதமாக இருக்கும். இந்த பென்ஷனுக்கு அகவிலைப்படியும் உண்டு. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பென்ஷன் 7.5% உயர்த்தி வழங்கப்படும் என்பதே ஆந்திர அரசாங்கம் இப்போது அறிவித்திருக்கும் உத்தரவாத பென்ஷன் திட்டம் ஆகும்.
பென்ஷன் மேம்பாட்டுக்கு கமிட்டி...
இந்தச் சூழலில், 2023-24-ம் ஆண்டுக்கான நிதி மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு, மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர், அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை மேம்படுத்த கமிட்டி அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நிதி செயலரின் தலைமையில் அமைக்கப்படும் கமிட்டியானது, ஊழியர்களின் தேவையையும், சாமான்ய மக்களின் வரிச்சுமை ஏறாதபடி நிதி நிலையையும் கருத்தில்கொண்டு தனது பரிந்துரையைச் சமர்ப்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமிட்டி தனது பரிந்துரையைச் சமர்ப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனாலும், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால், அதற்கு முன்பாகவே கமிட்டியானது பரிந்துரையைச் சமர்ப் பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது மேம்பாடு...
தற்போது அமையப்பெறும் கமிட்டி புதிய பென்ஷன் மேம்பாட்டுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்குமானால், அது அரசு ஊழியர்களுக்கான என்.பி.எஸ் திட்டத்தின் நான்காவது மேம்பாடாக இருக்கும். எப்படி எனில், என்.பி.எஸ் திட்டம் 01.01.2004 முதல் நடைமுறைக்கு வந்தபோது ஊழியர் தனது பங்களிப்பாக 10% சம்பளத்தை செலுத்துவார். அரசும் அதே 10% தொகையை ஊழியரின் பென்ஷன் கணக்கில் செலுத்தும். ஓய்வு பெறும்போது மேற்கண்ட பங்களிப்புடன் சந்தை வளர்ச்சியும் சேர்ந்த தொகையில் 60% தொகையை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம். 40% தொகையை பென்ஷனுக்காக ஒப்படைத்து பென்ஷன் பெற வேண்டும் என்பதே விதி. இதைத் தவிர, வேறு சலுகை எதுவும் 01.01.2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த என்.பி.எஸ் திட்ட ஊழியருக்கு அப்போது கிடையாது.
புதுப்பிக்கப்படும் புதிய பென்ஷன் திட்டம்... தமிழ்நாடு இணையுமா..?
கவனிக்கத்தக்க செய்தி...
22.12.2003 அன்று மத்திய அரசு என்.பி.எஸ் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணையில் மாநில அரசுகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. மத்திய அரசில் 01.01.2004-க்குப் பிறகு இணைவோருக்கானது என்.பி.எஸ் என்று மட்டுமே இருந்தது. இந்த நிலையில், தற்போது அமையும் கமிட்டியானது மாநில அரசுகளை யும் கலந்தாலோசிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இது கவனிக்கத் தக்கது. மத்திய அரசு அமைத் திருக்கும் கமிட்டியானது, ஆந்திர மாநிலம் அறிவித்துள்ள உத்தரவாத பென்ஷன் திட்டத்தை நடை முறைப்படுத்துவதன் சாத்தியக் கூறுகளை ஆராயும் எனக் கூறப் படுகிறது.
இதுநாள் வரை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு என்.பி.எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தற்போது மத்திய அரசு அமைத்துள்ள பென்ஷன் மேம்பாட்டு கமிட்டியானது தமிழக அரசையும் கலந்தாலோசிக்கும்.இந்த ஆலோசனையின் விளைவாக, தமிழ்நாடு அரசு மேம்பட்ட புதிய என்.பி.எஸ் பென்ஷன் திட்டத்தில் சேரும்பட்சத்தில், தமிழக அரசின் சி.பி.எஸ் திட்டத்தில் இணைக்கப் பட்டிருக்கும் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், அட்டவணையில் காட்டப்பட்டுள்ள பென்ஷன் பலனைப் பெற வாய்ப்பிருக்கிறது.ஆனால், தமிழக அரசு மேம்பட்ட புதிய என்.பி.எஸ் திட்டத்தில் சேருமா எனக் கேட்டால், சேருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கவே செய் கின்றன. அந்தக் காரணங்களைப் பார்ப்போம்.
1. என்.பி.எஸ் திட்டத்தில் ஊழியர்+அரசுத் தரப்பு சந்தா வானது பல்வேறு நிதி மேலாளர் களால் (Fund Manager) நிர்வகிக்கப் படுகிறது. முதலீடு செய்யப்படும் திட்டங்களும் பல வகையாக உள்ளன. எனவே, என்.பி.எஸ். முதலீட்டுக்கான வருமானம் அதிக மாக உள்ளது. சி.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்த தொகையை நிர்வாகம் செய்ய நிதி மேலாளர் யாரும் இல்லாததால், அதற்கு ஜி.பி.எஃப்-க்கான வட்டியே தரப்படுகிறது. இது என்.பி.எஸ்ஸில் கிடைக்கும் வருமானத்தைவிடக் குறைவு என்பது தமிழக அரசு ஊழியர்களின் கருத்து.
2. சி.பி.எஸ் திட்டத்தில் உள்ள ஊழியர் மற்றும் அரசுத் தரப்பு பணமானது எல்.ஐ.சி-யின் ஓய்வுக்கால நிதியம் மற்றும் அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், வருமானம் குறைவாக உள்ளது. ஆனால் சி.பி.எஸ்ஸுக்கு அரசு வழங்க வேண்டிய ஜி.பி.எஃப் வட்டி அதிகமாக இருப்பதால், ஆண்டுதோறும் ரூ.1,200 கோடிக்கு மேல் தமிழக அரசு நிதி இழப்பு ஏற்படுகிறது. இது மட்டுமன்றி, சி.பி.எஸ் திட்டமானது, ஊழியர்களுக்கு கணிசமான இழப்பை உண்டாக்குவதுடன், அவர்களை நிதிப் பாதுகாப்பின்மைக்கும் உள்ளாக்குகிறது.
3. என்.பி.எஸ் திட்டமானது பென்ஷன் ஃபண்ட் ஆணையத்தால் (PFRDA) ஒழுங்கமைக்கப்பட்டு, நிதி மேலாளர்களால் வெளிப்படையாக முதலீடு செய்யப்பட்டு, முறையாகக் கண்காணிப்புக்கு உள்ளாகிறது. 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பென்ஷன் ஃபண்ட் ஆணையம் என்.பி.எஸ் திட்டத்தில் சேரும்படி தமிழக அரசை மீண்டும் மீண்டும் அழைத்தும் தமிழக அரசு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே, இந்தியத் தலைமை கணக்காயரின் அபிப்பிராயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் பரிசீலித்து, மேம்பட்ட புதிய என்.பி.எஸ் திட்டத்தில் தமிழக அரசு சேர வாய்ப்புண்டு.
இது பற்றி தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான, பென்ஷன் மற்றும் ஓய்வுக்கால செலவுகளுக்கான மானிய கோரிக்கையில், கொள்கைக் குறிப்புகளாக (Policy Note) ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளன. தமிழக அரசு மேம்படுத்தப்படும் என்.பி.எஸ் திட்டத்தில் சேருமா என பொறுத்திருந்துப் பார்ப்போம்.