உலக புத்தக தினம் இன்று.
பதிப்பகங்கள் சிறப்புக் கண்காட்சிகளையும், புத்தகம் தொடர்பான நிகழ்வுகளையும் நடத்துகின்றன. நாம் படித்த புத்தகங்கள் குறித்து, புத்தக நினைவுகள் குறித்து பதிவுகள் எழுதுகிறோம்.
உலக புத்தக தினம் அறிவித்த யுனெஸ்கோ, இன்னும் பல விஷயங்களைச் செய்கிறது.
இது உலக புத்தக தினம் மட்டுமல்ல, காப்புரிமை தினமும்கூட.
முதல் முதலாக 1995 பாரிசில் உலகப் புத்தகத் தினம் கொண்டாடப்பட்டது. ஏன் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது? செர்வான்டிஸ், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் மறைந்த தினம். மௌரிஸ் டுரூவன், ஹால்டர் லாக்ஸ்நெஸ், விளாதிமிர் நபோகோவ் உள்ளிட்டவர்களின் பிறந்த தினம்.
எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் கொண்டாடுவதுடன் இளையோர் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம். இப்போது பதிப்புத்துறையினர் மட்டுமின்றி உலகளவில் பல தரப்பினரும் புத்தக தினக் கொண்டாட்டங்களுக்கு பங்களித்து வருகின்றனர்.
பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், நூலகங்கள் ஆகிய மூன்று துறையினரும் யுனெஸ்கோவுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரத்தை உலகப் புத்தகத் தலைநகராத் தேர்வு செய்கின்றனர். அது ஏப்ரல் 23 துவங்கி ஓராண்டு காலம் தலைநகராக நீடிக்கும்.
2018ஆம் ஆண்டுக்கு ஏதென்ஸ் நகரம் உலகப் புத்தகத் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது. ஏதென்ஸ் நகருக்குப் புலம் பெயர்ந்தவர்கள், அகதிகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் புத்தகங்களை எட்டச் செய்வது இதன் நோக்கம். எழுத்தாளர்கள் ஓவியர்கள் சந்திப்புகள், துறைசார் கருத்தரங்குகள், கண்காட்சிகள், கவியரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. (2003இல் தில்லி உலகப் புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.)
2019ஆம் ஆண்டுக்கு ஷார்ஜா உலகப் புத்தகத் தலைநகராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அண்மைக்காலத்தில் புத்தகங்கள், வாசிப்பு தொடர்பாக பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டது.
“Read - you are in Sharjah” இதுதான் ஷார்ஜாவின் கோஷம். யுஏஈ-யில் புலம்பெயர்ந்த மக்கள் நிறைய இருக்கிறார்கள், அவர்களையும் புத்தகங்களோடு இணைக்கும் திட்டம் இருக்கிறது. ஆறு விஷயங்களை ஷார்ஜா முனைப்புக் காட்ட இருக்கிறது — அனைவருக்கும் நூல், வாசிப்பு, பாரம்பரியம், மக்களை சென்றடைதல், பதிப்பு மற்றும் குழந்தைகள். பேச்சு சுதந்திரம், இளம் கவிஞர்கள் அரங்கம், பிரெயில் புத்தகப் பயிற்சிப் பட்டறைகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டமைக்கு இன்னொரு காரணம் – ஷார்ஜா பதிப்பு நகரம். Sharjah Publishing City என்ற பெயரில் முழுக்க முழுக்க பதிப்பு மற்றும் அச்சகத் துறைக்கென பிரம்மாண்டமான ஒரு நகர வளாகத்தை உருவாக்குகிறது ஷார்ஜா. அங்கே தொழில் துவங்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(அராபிய புத்தகச் சந்தையைக் கைப்பற்றுவதும் இதன் நோக்கமாக இருக்கலாம் என்றாலும், இது நிச்சயமாக சிறந்த்தொரு முயற்சி.)
உலகப் புத்தகத் திருவிழா தினத்தில் தனிநபராக நாம் என்ன செய்யலாம்? புத்தகம் வாங்கலாம், வாசிக்கலாம், பரிசளிக்கலாம்.
*வாசிப்பை நேசிப்போம் : முத்தமிழ் மன்றம் பா ஸி*📚📚📚📚📚📚📚
No comments:
Post a Comment