Monday, 23 August 2021

*சென்னை தினம்*

*மெட்ராஸ் டே கொண்டாடப்படும் இந்த நேரத்தில், "மெட்ராஸ் பாஷை" அல்லது "சென்னை பாஷை" சொல்லாடலை யாரும் எளிதாக கடந்து போய்விட முடியாது.*



*இன்னா..ப்பா, குந்துப்பா.. நாஷ்டா துன்னியா.. ரொம்ப பேஜாரா கீதுப்பா.. இப்படி யாராவது உங்களிடம் பேச்சுக் கொடுத்தால், முகம் சுளிப்பவரா நீங்கள். தேவையில்லை. இந்த பாஷையின் பின்னணியில் பெரும் வரலாறும், இலங்கிய செழுமையும் கூட உள்ளது.*

*சென்னையில் மட்டும் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் எது? பின்னர் நடிகர்கள் மூலம் எப்படி அது தமிழகம் முழுக்க பரவியது. வாங்க பார்க்கலாம்:*



*வங்காள விரிகுடா கரையோரம் அமைந்த சென்னையில் கால் பதிக்காத வெளிநாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லலாம். இங்கிலாந்து ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே, அரேபியர்கள், சீனர்கள் என பல நாட்டுக்காரர்களும், சென்னை மண்ணை தொட்டுச் செல்லாமல் போனதில்லை. இப்போது சென்னையில் பேசப்படும் சில வார்த்தைகள் இந்த குறிப்பிட்ட நாட்டுக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டதுதான். இவற்றைத்தவிர மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மொழிக்காரர்களும் சென்னையில் வசித்ததால், அவர்களின் வார்த்தைகளும் கலந்து சென்னை தமிழ் என்றாகிவிட்டது.*

*தற்போது பேசப்படும் சென்னை தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதிக்கம் அதிகம் கொண்டது. சில வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். உட்கார் என்பதைவிடவும் இலக்கிய வளமை கொண்ட சொல் குந்து என்பது. பாவேந்தர் பாரதிதாசன் கூட, காற்று குந்தி சென்றது.. மந்தி வந்து குந்தி.. என்று தனது கவிதைகளில் பயன்படுத்தியிருப்பார். வட கர்நாடகாவில் பயன்படுத்தப்படும் கன்னட சொற்களில் குந்து என்ற வார்த்தை இப்போதும், பயன்படுத்தப்படுகிறது*.

*சென்னை கதை" என்ற நூலின் ஆசிரியர் பார்த்திபன் இதுபற்றி கூறுகையில், சென்னை பாஷை என்பது கொச்சை என்று கற்பிதம் செய்யப்பட்டு இருக்கிறது. உண்மை அப்படி இல்லை என்று சொல்கிறார். நாஸ்டா என்று சொல் உருது மொழியில் வந்தது. பேஜார் என்பதும் ஆங்கில மொழியில் இருந்து உருமாறி வந்த வார்த்தை. ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து இறங்கும்போது கைரிக்ஷாக்காரர்கள் அவர்களை எங்கள் வண்டியில் வந்து ஏறுங்கள் என்று வலிந்து இழுக்கும்போது , ஆங்கிலேயர்கள் அவர்களை தவிர்க்க என்னை விடுங்கள் என்று கூற, அந்த ஆங்கில சொல் புழக்கத்தில் பேஜார் பண்ணாதே என மாறிவிட்டது, என்கிறார்.*

*சென்னை பாஷையை தமிழகம் முழுக்க கொண்டு சென்ற பெருமை நடிகர்கள் பலருக்கு உண்டு. எம்ஆர் ராதா தொடங்கி, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், லூசு மோகன் போன்ற நடிகர்கள் முதல் கமல்ஹாசன் வரை பல நடிகர்கள் சென்னை பாஷை பேசி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இதனால் அந்த பாஷை பட்டி தொட்டி எங்கும் புகழ் பெறத் தொடங்கியது. அடையாளம் கண்டறியப்பட்டது.*

*நடிகர்களில் ஒரு சிலருக்கு இந்த பாஷை ரொம்பவே செட்டாகிப்போனது உண்டு.சபாஷ் மீனா படத்தில் "இன்னாடா இது பேஜாரா போச்சு.. இன்னாடி எப்பப் பார்த்தாலும் ராங் பன்ற நீ" என்பது போன்ற புகழ் பெற்ற வசனங்களை சந்திரபாபு பேசினார். இதற்கு கிடைத்த வரவேற்பால், அதிகமாக மெட்ராஸ் பாஷை பேசி நடிக்கவும் தொடங்கினார் சந்திரபாபு. ரிக்‌ஷாக்காரான் திரைப்படத்தில் ரிக்‌ஷா ஓட்டுபவாரகவரும் தேங்காய் சீனிவாசன், ஆரம்பத்திலிருந்து கடைசிவரை மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். மெட்ராஸ் பாஷையைப் பேசுவதில் சந்திரபாபுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாராட்டுப் பெற்றவர் தேங்காய் சீனிவாசன்.*

*மற்ற நடிகர்களாவது பிற ஸ்டைல் வார்த்தைகளையும் பேசி நடித்திருப்பார்கள். ஆனால், லூஸ் மோகன் என்றாலே, மெட்ராஸ் பாஷைதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும் அளவுக்கு, மனிதர், மெட்ராஸ்காரராகவே வாழ்ந்திருப்பார். கண்ணை மூடிக்கொண்டே அவர் மெட்ராஸ் பாஷையை உச்சரிப்பதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.*

*மே தினம் திரைப்படத்தில் நடிகை மனோரமா பக்கா மெட்ராஸ்காரம்மாவாக பொருந்தி போயிருப்பார். மெட்ராசை சுத்திப் பார்க்கப்போறேன் என்ற பாடலை மனோரமாவே பாடியிருப்பார். இன்று வரை மெட்ராஸ் என்ற வார்த்தையை யாராவது காதில் கேட்டாலே, மனோரமா பாடிய இந்த பாடல்தான் உடனே வாயில் முனுமுனுக்கும். அப்படி மெட்ராசோடு ஒன்றிப்போன ஒரு பாடல் இது. நடிகர்கள் மட்டுமல்ல, நடிகையும் மெட்ராஸ் பாஷையில் கலக்க முடியும் என்று நிரூபித்தார் இந்த சகலகலாவள்ளி ஆச்சி.*

*பெரும்பாலும் ரிக்ஷாக்காரர் கதாப்பாத்திரத்தில் வருவதாலோ என்னவோ ஜனகராஜுக்கும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. கமல்ஹாசன் எந்த ஊர் பாஷையையும் பேசி அசத்தக் கூடியவர். சதி லீலாவதி படத்தில் கோவை பாஷை பேசி கலக்கிய கமல், பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசியிருந்தாலும், பம்மல் சுந்தரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்கள் என்றதுமே கமல்ஹாசனின் மெட்ராஸ் பாஷைதான் நினைவிற்கு வரும்.*

*இப்போது மெட்ராஸ் பாஷை வேறு பரிணாமம் பெற்று பயணிக்கிறது. பொல்லாதவன் திரைப்படத்தில் கிஷோர் பேசிய மெட்ராஸ் பாஷை இதற்கு ஒரு உதாரணம். எந்த வகையிலும் துருத்தி நிற்காமல் சென்னை மக்களோடு பயணிப்பதை போன்ற ஒரு, சொல்லாடலை பயன்படுத்தியிருப்பார். பிகிலு படத்தில் விஜய் மெட்ராஸ் பாஷை பேச நல்லாவே முயன்றிருப்பார். சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் தங்களுடைய படங்களில் இயல்பாக மெட்ராஸ் பாஷை பயன்படுத்தி, நகைச்சுவை காட்சிகளுக்கு மெருகேற்றிவருகிறார்கள். மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தி கூட சூப்பராக மெட்ராஸ் பாஷையை உச்சரித்து அசத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மெட்ராஸ் பாஷை அவ்வளவு இயல்பாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அங்கேயே வாழ்வது போல உங்களை படத்திற்குள் அழைத்துச் செல்லும்.*✍🏼🌹



No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...