*ஜூலை 1_தேசிய மருத்துவர்கள் தினம்..!!*
விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களுள் ஒருவருமான பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy) பிறந்த தினம் இன்று.
* பிஹார் மாநிலம், பான்கிபூரில் பிறந்தார் (1882). தந்தை, துணை கலெக்டராகப் பணியாற்றியவர். பள்ளிக் கல்வியை பாட்னாவில் முடித்தார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலும், பாட்னா கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார்.
* பெங்கால் பொறியியல்
கல்லூரியிலும் கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பித்திருந்த இவருக்கு இரண்டிலுமே இடம் கிடைத்தன. கல்கத்தா
பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
* மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை 2 ஆண்டு கள், 3 மாதங்களிலேயே முடித்து சாதனை படைத்தார்.
* கல்கத்தா மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1928இல் இந்திய மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்து வந்தார். 1931இல் கல்கத்தா மேயராக நியமிக்கப்பட்டார்.
* காந்திஜியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கேற்றார். சக அரசியல் நண்பர்களால் ‘பிதான் தா’ (அண்ணன்) என நேசத்துடன் அழைக்கப்பட்டார். நாட்டு மக்களுக்கு உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சுயராஜ்ஜியக் கனவு நனவாகும் என்று நம்பினார்.
* வறுமையில் தவித்த மக்களின் நலவாழ்வுக்காக ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு மருத்துவமனை, இந்திய மனநல சுகாதார மையம், விக்டோரியா இன்ஸ்டிடியூஷன், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றைத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு வங்காளத்தின் முதலமைச்சராக இவர்தான் பதவி ஏற்க வேண்டும் என்று கட்சி விரும்பியது. தன் சேவைகளுக்குப் பதவி இடையூறாகிவிடும் என்பதற்காக அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.
* அடுத்த ஆண்டு காந்திஜியின் ஆலோசனைப்படி முதல்வர் பதவியை ஏற்றார். 1948 முதல் 1962இல் மரணமடையும்வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் முதல்வராகச் செயல்பட்டார். அவர் பதவி ஏற்ற சமயம் அங்கு உணவுப் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து வந்துகொண்டே இருந்த அகதிகள் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் இருந்தன.
* தனது தலைசிறந்த நிர்வாகத்திறனுடன் அத்தனைப் பிரச்சினைகளையும் அபாரமாகக் கையாண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் அம்மாநிலம் அபார வளர்ச்சி கண்டது. ‘மேற்கு வங்காளத்தின் சிற்பி’ எனப் போற்றப்பட்டார். தன் வீட்டையே மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்தார். முதல்வராக இருந்தபோதும் ஏழை மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார்.
* இவரது சேவையைப் பாராட்டி 1961இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட களங்களில் முத்திரை பதித்த, பிதான் சந்திர ராய் 1962ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது பிறந்த நாள் அன்றே, 80ஆவது வயதில் காலமானார்.
* இந்தியாவில் இவரது பிறந்த தினம் தேசிய மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை படைப்போருக்கு இவரது நினைவாக பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய மருத்துவர்கள் தினம்..!!
உலகெல்லாம் அக்டோபர் 18ம் தேதி டாக்டர் தினம் கொண்டாடபட்டாலும்....
இந்தியாவில் அது ஜூலை 1ம் தேதி கொண்டாடபடும் அதற்கு காரணம் பிதான் சந்திர ராய் எனும் மகத்தான மருத்துவர் ஒருவர்...!!
அவர் வங்கத்துக்காரர், சுதந்திர போராளி நாட்டு பற்றாளர் என ஏகபட்ட முகங்கள் உண்டு, மேற்கு வங்கத்தின் முதல்வராக கூட இருந்தார்.
டாக்டர் என்பது அவரின் தொழில், அதில் தலை சிறந்தும் விளங்கினார். கல்கத்தாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தொழுநோயினை விரட்ட மிகபெரும் பணியாற்றினார்
அவருக்கு ஆச்சரியமான திறமை இருந்தது , மருத்துவ படிப்பில் மருந்து படிப்பு மற்றும் அறுவை சிகிச்சை படிப்பு என இரு படிப்பினை ஒரே நேரம் படித்து ஒன்றாக பட்டமும் வாங்கினார்
அந்த அனுபவத்தை இத்தேசத்துகாக செல்வழித்தார். உலகின் மிகசிறந்த மருத்துவர் எனும் பொழுதும் இந்திய மருத்துவதுறைக்கு தன் வாழ்வினை அர்பணித்த அவரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் என்பதால் அதுவே இந்திய மருத்துவ தினமாயிற்று
மருத்துவன் என்பது இரண்டாம் கடவுள், வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் ஒருமுறையாவது மருத்துவன் கையில் விழுந்தே தீருவான், விதிவிலக்கு என யாருமே இருக்க முடியாது
மருத்துவர்களின் அருமை எக்காலமும் தெரியும் எனினும் கொரானா காலத்தில் அவர்கள் சந்திக்கும் யுத்தம் மிக மிக கடுமையானது.
யுத்த காலம் வரும்வரை ராணுவத்தாருக்கு சிக்கல் இல்லை, ராணுவ அதிகாரி , கர்ணல், ஹவில்தார், லெப்டினன்ட் ஜெனரல் என கம்பீரமாக வருபவர்களை பார்த்து சிலருக்கு பொறாமையாக கூட இருக்கும்
ஆனால் யுத்தம் என வந்தால் அவர்கள் களத்தில் உயிரை கொடுத்து நிற்கும்பொழுதுதான் அவர்களின் அருமை தெரியும்
வெள்ளம் வரும்பொழுதுதான் பொதுபணியினருக்கு சவாலான காலம், இயற்கை சீற்றம் மின்வாரியத்துக்கு சவாலான காலம்..
ஒரு நட்டு கழன்றாலும் அணுமின் நிலையதுறையினரின் பதற்றம் சொல்லி மாளாது..
தீபற்றி எரியும் பொழுதுதான் தீயணைப்பு வீரனின் அருமை தெரியும்
நிறைய சம்பாதிக்கின்றார்கள், பெருவாழ்வு வாழ்கின்றார்கள், கொள்ளையோ கொள்ளைக்காரர்கள் என்றெல்லாம் சொன்னாலும் கொள்ளை நோய் காலங்களில் மருத்துவர்களின் சவால் அதிகம்
நோய் பரவுகின்றது என்றவுடன் நாமெல்லாம் எப்படி துடிக்கின்றோம், தற்காப்புக்கே என்னபாடு படுகின்றோம்?
ஆனால் மருத்துவர்கள் எந்நிலையிலும் உயிருக்கு துணிந்து கடமையாற்ற வேண்டும், அரசு அல்லது தனியார் மருத்துவர்கள் விடுமுறை என ஓடமுடியாது
போருக்கு சமமான காட்சி அது , நோய் தொற்றலாம் 99% வாய்ப்பு உண்டு ஆனால் அந்நிலையிலும் சிகிச்சை கொடுத்தே தீரவேண்டும், தீபிடித்த கட்டடத்துக்குள் உயிரை பணயம் வைத்து ஓடும் மீட்பு வீரன் போல, வழியும் வியர்வையினை துடைத்தபடி வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர் போல உயிரை பிடித்து நிற்க வேண்டும்.
பதற்றதை கொஞ்சமும் வெளிகாட்டாமல் நோயாளிக்கு நம்பிக்கையூட்டி தனக்கு பரவும் வாய்பிருந்தும் சாவுக்கு துணிந்து அவர்கள் போராடுவதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் தருணங்கள்..
ஒவ்வொரு தொழிலின் கஷ்டமும் சவாலும் உணர ஒரு நேரம் வேண்டும், அப்படி மருத்துவ சேவையின் மகத்துவத்தை உலகம் அறியும் நேரமிது
தென்கொரியாவும் சைனாவும் சிகிச்சை கொடுத்து சிலரை காப்பாற்றி செத்து கிடக்கும் மருத்துவர்களை காண்கின்றது, அமெரிக்கா அதை கண்ணார காண்கின்றது
பிரேசிலில் ஒரு மருத்துவன் ஆளவரவேண்டும் என்ற கூக்குரல் எழுகின்றது, ரஷ்யாவில் செஞ்சேனை வீரர்களுக்கு நிகரான கவுரவம் இப்போது மருத்துவர்களுக்கு கிடைக்கின்றது.
அந்நாடுகள் நெருக்கடி காலம் முடிந்ததும் அவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கபடும் என அறிவிக்கின்றன
ஆம், கண்ணதாசன் எழுதிய அந்த காட்சிதான் "ஒன்றையே நினைத்திருந்து, ஊருக்கே வாழ்ந்திருந்து உயிர்கொடுத்து உயிர்காத்த உத்தமர்கோர் ஆலயம், நெஞ்சிலோர் ஆலயம்.."
இந்த நெருக்கடியில் போர்கால வீரர்களாக அனுதினமும் மிகுந்த சவால் எடுத்து அந்த நோயுடன் போரடும் ஒவ்வொரு மருத்துவரும் கடவுளுக்கு சமம்
நாயகனில் பாலகுமாரன் சொல்லும் அந்த வசனம்தான் "யோவ் டாக்டரு, உசுர காப்பாத்திட்டய்யா.. என்னால முடியுமா..இவனால முடியுமா? உன்னால முடியும்யா.. நீ சாமிய்யா.."
மருத்துவம் கடவுளுக்கு நிகரானது என்பதை உணரும் நேரமிது, மருத்துவர்கள் சாவுக்கு அஞ்சா மனுகுல சேவையாளர்கள் என்பதை நினைத்து கண்ணீர்விடும் காலமிது
இந்திய தேசத்திலும் கொரோனா உச்சகட்டமாக பரவுகின்றது, மக்கள் கலங்குகின்றார்கள். ஆனால் மருத்துவர்கள் கடமையாற்ற கிளம்புகின்றார்கள். எச்சரிக்கையும் ஆலோசனையும் நம்பிக்கையும் கொடுக்கின்றார்கள்
சிக்கிய நோயாளிகளுக்கு உலக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையும் அளிக்கின்றார்கள், அய்யகோ எங்களுக்கு வருமோ என ஓடி ஓளியவில்லை, ஒளியவும் முடியாது
நோய்க்கு அஞ்சி ஓளியும் நம் மனநிலையில், கொஞ்சமும் அஞ்சாமல் கடமையாற்ற முன்வரும் மருத்துவரை காணுங்கள், நம் கரம் தானாய் குவியும், கண்ணீர் தானாக சொட்டும்
அந்த தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள்..
இந்நாட்டு மக்களின் வாழ்த்தும் ஆன்மபலமும் அவர்களை காக்கும் , அவர்களுக்கு ஒரு ஆபத்தும் நேரா.
களத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு நன்றியும் கண்ணீரும் தெறிக்க மருத்துவ தின வாழ்த்துக்களை சொல்வோம்
உங்களால் மட்டுமே , உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் மட்டுமே தேசத்தில் வாழ்கின்றது ஜனம்
தேசத்தின் இரண்டாம் காவல் வீரர்களுக்கு, காக்கும் தெய்வங்களுக்கு, கொரோனா காலத்தில் மிக பெரும் சவாலுடன் களத்தில் நிற்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்
தேசத்தின் ஒரே நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் அடைக்கலமுமான உங்களுக்கு எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும், எல்லா நலமும் வளமும் பலமும் உங்களை வந்தடையட்டும்.