Sunday, 26 July 2020

தீராத விளையாட்டுப் பிள்ளைகள்

18.07.2020

பாலறாவாயன் கலைக்குழுமம் - சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - தமிழ்நாடு - 

சிறப்பு பரிசு பெற்ற எனது சிறுகதை- எழுத்தாளராக களம் கண்ட தருணம்..


கதைத் தலைப்பு

தீராத விளையாட்டுப் பிள்ளைகள்
------

மதுரை மாநகரத்திலிருந்து இருபது மைல் கல் தொலைவில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சிறிய கிராமம்  தென்றலூர்.  இரண்டொரு தெருக்கள் மட்டுமே உள்ள அந்தக் கிராமத்தில், கம்பன் தெரு, வள்ளுவர் தெரு, பாரதி தெரு என தமிழுக்கு பெருமை சேர்க்கும் பெயர்கள்.  நீதி, நேர்மை என அறம் வழுவாது தாங்கள் வாழ்வது மட்டுமல்ல தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர்கள் அக்கிராமத்து மக்கள்; பிள்ளைகளும் அவர்களின் சொல் கேட்டு சிறிதும்  தப்பாமல் அப்படியே நடப்பார்கள்;  பத்து பதினைந்து  வீடுகள் ஒரு வீதியாக இருக்கும். ஒரு தெருவிற்கும் அடுத்த தெருவிற்கும் இடையில் கிட்டத்தட்ட அரை மைல்கல் தொலைவு.

ஒரு தெருவிலிருப்பவர்கள் அடுத்த தெருவிற்கு வந்து நலம் விசாரிப்பது;  குழந்தைகள் ஒடியாடி விளையாடுவது; பெண்கள் ஒரு வீட்டு வாசலில் கூடி மகிழ்வது;  பருவப் பெண்கள் சேர்ந்து பல்லாங்குழி ஆடுவது; ஆண்கள் அரட்டையடிப்பது  என எப்போதும் அத்தெருக்கள்  கலகலப்பாகவே இருக்கும் .  அன்று  ஞாயிற்றுக் கிழமை வேற கேட்கவா வேண்டும் குதூகலத்திற்கு. 

நண்பகல் இரண்டு மணிக்கு பல்லாங்குழி  விளையாடிக் கொண்டிருந்த,  கம்பன் தெருவில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் பார்வதியின்   மகள் புவனா;  அக்கம் பக்கம்; அடுத்த தெரு  என எங்கு தேடியும் இரவு ஒன்பது மணியாகியும் காணவில்லை. பெண் பிள்ளைகள் காணாமல் போனால் விதவிதமாக கதை கட்டும் உலகம். இந்த ஊர் மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

தெருவோரத்தில் அமர்ந்து அலைபேசியில்  வார்த்தை விளையாட்டு விளையாடிக்  கொண்டிருந்த பாரதியார் தெருவில் வசிக்கும் பத்மாவின் மகன் ராமு;  பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் என்சிசி, விளையாட்டு என பல்கலையில் தேர்ந்த வித்தகன்.

கண்களை சுற்றும் முற்றும் தெருவில் சுழல விட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டிருருந்த புவனா  மூச்சிரைக்க இரைக்க ஓடி வருகிறாள் தெரு முனைக்கு.  ராமுவை பார்த்ததும் அவள் மனசு  மகிழ்ச்சியில் துள்ளுகிறது.  ஏ!  நீ ஏங்கூட உடனே வாடா ; அதட்டலோடு அழைக்கிறாள்.  ராமு ஒரு வயது மூத்தவன் என்றாலும் சிறு பிள்ளையிலிருந்தே பேசி பழகியதால் வாடா போடா என்று அவள் அழைப்பது வழக்கம்.  எங்க கூப்பிடற வர முடியாது போ ; ஏன், எதுக்கு அப்டினு எல்லாம் கேட்கக் கூடாது, ஒழுங்கா வா, முடியாது புவனா, அவன்  பிடிவாதமாக வர மறுக்க, அவள் கையைப் பிடித்துக் கொள்கிறாள்; இவன் திமிர, இது நல்லதுக்கு இல்லை  புவனா தெருக்காரவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க;  எதுவும்  காதில் விழாதது போல் தரதரவென  இழுத்துக் கொண்டே எதிரில் இருக்கும் பொட்டல் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள். எங்கே  கையை விட்டுவிட்டால் அவன் ஓடிப்போயிடுவானோ என  அவளுக்குள் ஒரு பயம். 

 என்ன பண்ற நீ என்று சொல்லிக் கொண்டு திரும்பியவன் ;  அய்யோ புவனா இது என்ன அலங்கோலம் ? என்ன நடக்குது இங்க? அவன் வாயைத் தன் கைகளால்  பொத்துகிறாள் அவள்;  அடுத்த கணத்தில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் அடுத்தடுத்த வேலைகளை தன்னையே அறியாமல் கடகடவென  வேகமாக கண கச்சிதமாக செய்து முடிக்கிறான். அப்படியே அரங்கேறிய காட்சிகளையெல்லாம்   தன்னுடைய அலைபேசியில் புகைப்படமும் எடுத்துக் கொண்டு; அதற்கடுத்த  வேலைகளையும் முடித்துவிட்டு அவர்கள் வீடு வந்து சேரும் போது இரவு ஒன்பது மணி இருபது நிமிடங்கள். 

அதற்குள் இருவரது பெற்றோரும் எங்கங்கோ தேட,  தெருக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கட்டுக்கதைக் கட்டிவிட ; ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தான;  அவர்களின் சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தெருமுனையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ராமையா வந்து சொல்கிறான்;  ராமுவும், புவனாவும் கையைக் கோர்த்துக்கிட்டு மத்தியானம் மணி இரண்டு இரண்டறைக்கு எதிரிலிருக்கிற  பொட்டல் காட்டுக்குள்ள போனத நான் என் இரண்டு கண்ணால பார்த்தேன். 

 இருவருடைய பெற்றோர் முகமும் சங்கடத்தில் வாடி,   மனம் நொந்து வெட்கித் தலைகுனிந்த நிலையில் நிற்கின்றனர். 

தாங்கள் செய்து முடித்த விசயத்தைப் பற்றி எதுவும் பெரிதாக  நினைக்காமல்,  எந்தவித சலனமுமின்றி, ராமுவும் புவனாவும் ஊருக்குள் வரும் போது எல்லா தெருக்காரர்களும் ஒரே தெருவிலேயே குழுமியிருக்கிறார்கள். 

 இரண்டும்  சிரிச்சு சிரிச்சு பேசிட்டு சோடியா வருதுக பாரு ; ரொம்ப தெனவட்டா, பெத்தவக அடிச்சு புத்திமதி சொல்லி  வளத்திருக்கனும், அப்படி செய்யாததால தான் இப்படி அடங்காம ஊர சுத்திட்டு என்னென்ன பண்ணிட்டு வருதுகளோ? 

வார்த்தைகளின் சூடு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பெற்றோர்களைத்  தாக்க, தரதரவென தன் மகள் புவனாவை இழுத்துச் செல்கிறாள் பார்வதி;  ஏம்மா இப்படி இழுத்துட்டு போறீங்க;  அம்மா நான் தெருமுனையில நின்னு இருந்தேனா ; அப்போ ராமு அங்க இருந்தானா; எதுத்தாப்ல இருந்த  பொட்டல்காட்டுக்குள்ள போயி;  போதும் போதும் நிறுத்து டீ; அதான் பெட்டிக்கடை ராமையா எல்லாத்தையும்  சொல்லிட்டானே ;  உன்னையெல்லாம் உசுரோட மண்ணுல புதைக்கணும்டீ;  எம்புட்டு  தைரியம், இந்த காலுல தான அவன் கையை பிடிச்சுகிட்டு பொட்டல்காட்டுக்குள்ள நடந்து போயி; சொல்லவே நா கூசுது;  தோசைக்கரண்டியை வைத்து இரண்டு பாதங்களிலும் இழுக்கிறாள். அய்யோவென பூமிக்கடியில் பூகம்பம் வருவது  போல் தென்றலூரே அதிரும்படி அழுகிறாள் புவனா.

உன்ன எனனோட புள்ள சொல்லவே வெட்கமா இருக்கடா; உங்க அம்மாவும் நானும் சாகனும்டா உன்ன பெத்ததுக்கு;  எவ்வளவு தூரம் அறிவுரை சொல்லிருக்கோம்.  பொம்பளப் பிள்ளைகளையெல்லாம்  அக்கா தங்கச்சியப் பார்க்கனும் ; படிக்கற வயசுல காதல் கீதலுனு ஊர் சுத்தக் கூடாதுனு ;  அப்பா நான் எந்தத் தப்பும் பண்ணல,  நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கப்பா;  நீ சொல்றத நான் காது கொடுத்து  வேற கேட்கணுமா டா ? ராஸ்கல்  உன்ன என்ன பண்றேனு பாரு;  பெல்ட்டை எடுத்து  சராமாரியாக அடித்து விலாசி உடம்பெல்லாம் புண்ணாக்குகிறார்.

 இரவெல்லாம் வலி பொறுக்காது  முனகிக் கொண்டே இருந்த ராமுவும், புவனாவும், கதிரவன் கண்திறக்கும் வேளையில்; செய்தித் தாள்கள் கைகளில் புரளும் அந்த அதிகாலை நேரத்தில் ; லேசாக  கண்களை மூடுகின்றனர். நிலக்கரி சுரங்கத்திலிருக்கும் கொதிகலன் போல் இருவரது உடம்பும் கொதித்துக் கொண்டிருக்கிறது. 

விடிகாலை முதல் வேலையாக செய்தித் தாள் படிக்கும் பழக்கம் உள்ள ராமையா அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருக்கும் ராமு, புவனாவின் புகைப்படத்தை  பார்த்துவிட்டு ஒரு நொடி அதிசியத்து பின் செய்தியைப் படித்தவன்:  மூச்சிறைக்க ஓடி வருகிறான் புவனா வசிக்கும் கம்பன் தெருவிற்கு.  என்னமோ ஏதோவென செய்கின்ற வேலையை அப்படியே போட்டுவிட்டு எல்லோரும் அவரவர் வீட்டின் முன் சிலையாக நிற்கின்றனர். 

முக்கிய குற்றவாளிகளாகத் தேடப்பட்டு வந்த, குழந்தைகளை பலாத்காரம்  செய்யும் பெரிய கும்பலை; தங்களுடைய துணிச்சலான செயலால் சமயோசிதமாகச் சிந்தித்து;  கையிலிருந்த அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து காவல் துறைக்கு புலனம் வழியாக துரித கதியில்  அனுப்பி;   கைது செய்யக் காரணமாக இருந்த,  மதுரை தென்றலூரில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகள் ராமு மற்றும் புவனாவை பாராட்டவும்;  அவர்களின் துணிச்சலான செயலுக்கு காரணமாக இருந்த பெற்றோர்களுக்கு நேரில் நன்றி சொல்லவும்;  மதுரை காவல்துறை ஆணையர் அவர்கள் இன்று அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார். மேலும் இந்தாண்டின் தமிழக அரசின் சிறந்த  வீரதீர செயல்களுக்கான விருதிற்கு அவர்களை சிபாரிசு செய்வதாகவும் அறிவித்துள்ளார். செய்தி எல்லோர் காதுகளுக்கும் கேட்கும்படி படித்து முடிக்கிறான் ராமையா.

  முற்றும்

தி. இராஜபிரபா, 
தேனி

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...