Monday, 27 July 2020

*புதிய 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு' *

*புதிய 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு' சொல்வது என்ன..? ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்..?*



மத்திய அரசின் 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'. இப்படி பெரும்பாலானோரால் கவனிக்கப்படாத இந்த புதிய வரைவு, இன்று தனது எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளும் பலரையும், வருங்காலத்தில் கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்படி என்ன இருக்கிறது இந்த சட்டத்தில், கடைகோடி மனிதன் ஒருவனின் வாழ்வில் இது ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என்ன.. அரசியல் கட்சிகள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரிடம் இருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது ஏன்?


இதுவரையிலான சட்டத்தின்படி, இந்தியாவின் எதாவது ஒரு பகுதியில், ஒரு பெருநிறுவனம் தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால், 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை' என்ற ஒன்றை தயார் செய்து, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அந்த அறிக்கையில், தங்களது தொழிற்சாலை அமையவுள்ள பரப்பளவு, அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, கழிவு மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அந்நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அவற்றிற்கு அனுமதி வழங்கவோ, அப்படி இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். எனவே தொழிற்சாலைகள் தொடங்கப்படும் முன், அவற்றால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்த ஒரு தெளிவான பார்வை அரசாங்கம் மற்றும் மக்களுக்கு கிடைக்கும். இப்படி இருந்துவரும் சூழலில்தான் இந்த நடைமுறையை மாற்றும் வகையிலான 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் கீழ் உள்ள ஒரு சட்டமாகும். இது முறையான மேற்பார்வை இல்லாமல் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தடுக்கிறது. இந்த செயல்முறையானது, ஒவ்வொரு திட்டமும் முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதை உறுதி செய்துவந்தது. 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை மாற்றியமைத்து  ‘சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020' என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவு, மூன்று முக்கிய கவனிக்கத்தக்க குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. 


முதலாவதாக, குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டுத் தொழில் திட்டங்களுக்கான பொது கருத்துக்கேட்பை இந்த புதிய வரைவு தடைசெய்கிறது. இதனால், நீர்ப்பாசனம், தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல், ரோப்வேக்கள், கட்டிட நிர்மாணங்கள் போன்ற திட்டங்கள் ஒரு பகுதியில் செயல்படுத்தப்பட்டால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் இதுகுறித்த தங்களது கருத்துகளைப் பதிவிடமுடியாத நிலை ஏற்படலாம். இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஒரு எண்ணெய் நிறுவனமோ அல்லது கனிம நிறுவனமோ தங்களது இடத்தில் தொழில் தொடங்கினால், அதற்கு எதிராக கருத்து கூற முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம் என்றும், இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலைப் பறிக்கும் வகையிலான செயல் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதேபோல, மற்ற தொழிற்சாலைகள் குறித்த பொதுகருத்துக்கேட்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, பொதுமக்கள் பங்கேற்புக்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசமும் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைக்கப்படுகிறது. 


இரண்டாவதாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தை தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு அனுமதி அளிக்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மாநில மற்றும் மத்திய குழுக்கள் என இரண்டு அமைப்புகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற சூழல் இருந்துவந்த நிலையில், ஒப்புதல் பெறாமலேயே எந்த தொழிற்சாலையும் தொடங்கலாம் என்ற நிலை எதிர்காலத்தில் இதனால் உருவாகும் அபாயமும் உள்ளது. என்னதான் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஒரு குழு ஆய்வு செய்யும் என்றாலும், அதற்குள் அந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பெரும் தொகை, அவர்களின் நேர்மையான முடிவுகளுக்கு இடையூறாக கூட அமையலாம். 

 

இதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்த இணக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது. இது தொழிற்சாலைகள் மீதான ஆய்வுகளையும், அவை நம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிந்துகொள்வதற்கான திறனைக் குறைக்கலாம். மேலும், நீர் ஆதாரங்களின் ஊற்றாக விளங்கும் சதுப்புநிலக் காடுகளில், மணல் போட்டுச் சமன்படுத்துவதற்கு அனுமதியோ, சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்யத் தேவையில்லை என்று கூறும் பிரிவும் இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல், வறண்ட புல்வெளிக் காடுகள், தரிசு நிலங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அப்பகுதி தொழிற்சாலைகளுக்காக திறந்துவிடப்படவும் இந்த வரைவு வழிசெய்கிறது. 


மூன்றாவதாக, புதிய வரைவில், சூழலியல் தாக்க மதிப்பீட்டு எல்லைக்கு அப்பாற்பட்டதாக சில துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சுருக்கமாக சொன்னால், எந்தவொரு திட்டத்தை அரசாங்கம் "மூலோபாய திட்டம்" (strategic plan) என்று முத்திரை குத்துகிறதோ, அந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியில் மக்கள் முன் வைக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் அனைத்து உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், 1,50,000 சதுர மீட்டர் வரையிலான கட்டுமான திட்டங்கள் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெற விலக்கு அளிக்கப்படும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த வரம்பு 20,000 சதுர மீட்டர் என இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படி பலவகையான புதிய மாறுதல்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வரைவு, இந்தியாவின் தொழிற்துறையை வளர்ச்சியை நோக்கி உயர்த்தும் என மத்திய அரசு தெரிவித்தாலும், சில நூறு பெருநிறுவனங்களின் வளர்ச்சி என்பது பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களின் இருப்பையும் அசைத்து பார்க்கும் வகையில் அமையக்கூடாது என்பதே இந்த வரைவை எதிர்ப்பவர்களின் முதல் கருத்தாக உள்ளது. மத்திய அரசின் இந்த வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 2020, ஆகஸ்ட் 11 வரை அவகாசம் வழக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை eia2020-moefcc@gov.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பும்படி, அரசு தெரிவித்துள்ளது. 

எதிர்ப்பு தெரிவிக்க ஈமெயில் அனுப்ப. 
Email Link: https://tinyurl.com/drafteiawithdrawal/ 

#WeRejectEIA2020
https://www.nakkheeran.in/special-articles/special-article/eia-2020-draft-keypoints-note?fbclid=IwAR2XAa_Xea0g8SmRkXqDHESbvZoq8jzf-xEE5eUva9JyphpHBUvTs4nLTEE

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...