புத்தகக் கடையொன்றில் சில காலம் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார். .
"அபு இப்ராகிம்" என்ற அந்த மனிதர் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு வருவாராம். ஒவ்வொரு முறையும் முப்பது, நாற்பது புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவாராம்.
எதற்காக, இத்தனை புத்தகங்கள் வாங்குகிறீர்கள்?' எனக் கேட்டதற்கு, தன்னைத் தேடி வீட்டுக்கு வரும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு கொடுப்பது வழக்கம். இந்தப் பழக்கத்தை 25 வருஷங்களுக்கும் மேலாகக் கடைப்பிடித்து வருவதாகச் சொல்லி யிருக்கிறார்.
ஒருமுறை அவர் வருவதற்குப் பதிலாக, அவரது மகன் கடைக்கு வந்து நூறு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அப்பா வரவில்லையா எனக் கேட்டதற்கு, "அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அப்பாவைப் பார்க்க வருபவர்களுக்குக் கொடுப்பதற் காகத்தான் இந்தப் புத்தகங்களை வாங்குகிறேன். இதன் முகப்பில் என்னால் உங்களுடன் பேச முடியவில்லை; ஆனால் இந்தப் புத்தகங்கள் என் சார்பாக உங்களுடன் பேசும்' என அச்சிட்டுத் தரப்போகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்ராகிமின் மகன் புத்தகக் கடைக்குத் தேடி வந்து 500 புத்தகங்கள் வாங்கி யிருக்கிறார். அப்பா எப்படி இருக்கிறார்? எனக் கேட்ட போது, "அவர் இறந்துவிட்டார் அவரது இறுதி நிகழ்வுக்கு வருபவர்களுக்குத் தருவதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள். இதில், 'இனி நான் உங்களுடன் இருக்க மாட்டேன் என் நினைவாக இந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கட்டும்' என அச்சிட்டு தரப் போகிறோம். இதுவும் அப்பாவின் ஆசையே" என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படியே இப்ராகிமின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் புத்தகங்களைத் தந்திருக்கிறார்கள். இதை நண்பர் சொல்லியபோது, எனக்குச் சிலிர்த்துப்போனது. தன் வாழ்நாளிலும், அதற்குப் பின்னும் புத்தகங்களைப் பரிமாறிக் கொண்ட அற்புதமான மனிதராக அவர் இருந்திருக்கிறாரே!' என வியந்து போனேன்.
"புத்தகங்கள் மட்டுமில்லை, அதை நேசிப்பவர்களும் அழிவற்றவர்களே"!
படித்ததில் பிடித்தது.
No comments:
Post a Comment