வரலாறு
கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. இந்த மாவட்டத்தில் சிந்து ஓவிய நாகரிகம் மற்றும் பல பாறை ஓவியங்கள் மற்றும் பாறை சித்திரங்கள் இந்த மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை பறை சாற்றுகின்றன. சோழர் காலத்தின்போது, கிருஷ்ணகிரிப் பகுதி ‘நிகரிலி சோழமண்டலம்’ என்றும் ‘விதுகதழகி நல்லூர்’ என்றும் அழைக்கப்பட்டது. வரலாற்று ஆதாரங்களின்படி ‘நுளம்பர்’ ஆட்சியின் கீழ் இது ‘நுளம்பாடி’ என பிரபலமாக இருந்தது.
கிருஷ்ணகிரி முற்காலத்தில் “எயில் நாடு” எனவும், ஓசூர் “முரசு நாடு” எனவும், ஊத்தங்கரை “கோவூர் நாடு” எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
போரில் உயிரிழந்தவர்களை பெருமைப் படுத்தும் வகையில் நடுகற்கள் அமைக்கப்பட்டன. ‘சங்க காலத்திலிருந்து அரசர்களின் நலனுக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்யும் மக்களுக்கு நினைவுக் கற்கள் அமைப்பதற்கான ஒரு பாரம்பரியம் இருந்தது. சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் “நவகண்டம்” எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது.
இந்த மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய நினைவுச்சின்னங்கள் ஏராளமான மக்களின் பெருமையையும், நல்லொழுக்கத்தையும் பற்றி நிறைய பேசுகின்றன. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மைசூர் பகுதிகள் சங்க காலத்தில் “தகடூர்” அல்லது “அதியமான் நாடு” என்று பெயரிடப்பட்டன. மகாராஜா அதியமான் தனது அவையை அலங்கரித்த பெரும் கவிஞரான “அவ்வையார்”க்கு நீண்ட ஆயுளை தரக் கூடிய “கருநெல்லி”க் கனியை வழங்கினார்.
பல்லவர்கள், கங்கா வம்சத்தினர், நுளம்பர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜய நகர் பேரரசர்கள், பிஜப்பூர் சுல்தான்கள், மைசூரின் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோர் இந்த பகுதியை ஆண்டனர்.
முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது. இப்பகுதியில் “பாராமகால்” என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாஷா மலை. இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். ஹொய்சாள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் “குந்தானி” என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.
முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.
“ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை” யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது.
மூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்.
கிருஷ்ணகிரியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது.
2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment