ஓசூர் வரலாறு. History Of HOSUR
குளிர் போர்வையால்
போர்த்தப்பட்ட இரவும்,
வெண்பனித்திரையால்
மூடப்பட்ட காலையும்,
எங்கெங்கு காணினும் அழகிய பூந்தோட்டம் ,
பலவண்ண கலவையில் சொக்கவைத்த...
தூய குளிர்ந்த காற்று வீசிய ஒசூர் தற்பொழுது ,வெப்பத்தின் பிடியிலும் சிக்குண்டு கிடக்கிறது,
இந்நகர் இன்றைய உலக தொழில் வரைபடத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்டது.
மிக அமைதியான கிராமத்தன்மை கொண்டிருந்த ஒசூர் இன்று நகரங்களுக்கு உரிய பரபரப்பு தன்மையோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது,
அருகில் இருக்கும் கர்நாடக தலைநகர் பெங்களூர் தொழிற்சாலைகள் நிரம்பி பிதுங்கியபோது
அதே சீதோஷ்ண நிலை அடுத்துள்ள புறநகர் பகுதி போன்று அமைந்திருந்த ஒசூர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாகும்.
தமிழக அரசும் இந்த புதிய சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கான
மின்சாரம்,போக்குவரத்து,
சாலை வசதி,
இடவசதி போன்றவைகளை செய்து கொடுத்தது.
அதன் விளைவாகக் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள அத்தனை மொழியினரும், இனத்தினரும்
ஒசூர் நகரவாசிகளாக வியாபித்து இருக்கின்றனர்.
இன்று குட்டி இந்தியாவாக இருக்கிறது.
சிறிதும்,பெரிதுமான தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. ஒசூர் இன்று இத்தகைய பெருமையைஉள்ளடக்கியதாக இருந்தாலும் கடந்த 800 ஆண்டு வரலாற்றை தன்னகத்தே கொண்டு பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
ஒசூர்" என்று தமிழிலும் "ஹோசூர்" என்று பிற மொழிகளிலும் அழைக்கப்படும் இந்த ஊர்
"ஒச ஊரு" என்றும்
(மிகப்பழைய பெயர் செவிடநாடு)
ஆதி நாட்களில் அமைக்கப்பட்டுள்ளதாக வரலாற்று பதிவுகள் உள்ளன.
கன்னட மொழியில் ஒச என்றால் புதிய என்று பொருளாகும்.
புதிய ஊர் தான் ஒசூரானது,
1129 சாலிவாகன சக ஆண்டு அதாவது சுமார்,
கி.பி 1207 ஆம் ஆண்டு ஒசூர் நியமிக்கப்பட்டதாக ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.
வடமாநிலத்தில் உள்ள மதுரா நகரை அடுத்து கோகுல பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது.
அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்து,ஒசூர் அருகிலுள்ள பாகலூரைத் தம் இருப்பிடமாக்கிக் கொண்டு ஆட்சி செய்தவர் பட்டா குர்ரப்ப நாயகா என்னும்
குறுநில மன்னன்.
அவரது ஆணையை ஏற்று
பட்டத குர்ரப்ப நாயகா
ஒசூர் நகரை நிர்மாணித்தார்.
ஒசூரில் பழமையும்,சிறப்பும் வாய்ந்த
மலைக்கோவிலான சந்திர சூடேஸ்வரர் கோயிலில்
படியெடுக்கப்பட்ட
கல்வெட்டில் சக ஆண்டு 1218 கி.பி 1296 இல் இக்கோவிலின் மூலவர் செவிட நாயனார்
என்று அமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
ஊரின் பெயரும் செவிடநாடு என்று
கூறப்பட்டது.
கோயிலுக்கு உள்ளும்,கோவிலில்
பிரதான சுவர்களிலும்
உள்ள கல்வெட்டுக்களில்
செவிட நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளதை
இன்றும் படித்தறியலாம்.
பின்னர் இராமநாத மன்னன் ஒசூர் நகர ஆட்சியில் அமர்ந்தார்.
வேப்பனம்பள்ளி அருகில் இருந்த குண்டலி என்னும் ஊரே அவரது தலைநகராக இருந்தது.
அவரும், அவரது மனைவியும்
இறந்த பின் ஒசூரிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
இராமநாத ஏரி என்னும் அவரது பெயரிலேயே "இராம நாயக்கன் ஏரி" என்று அழைக்கப்படுகிறது.
இராம நாதனுக்குப் பின் அவரது மகன் விசுவநாதன் ஓசூர் ஆட்சிப்பொறுப்பைஏற்றார்.
விசுவநாதனின் திறமை இன்மையால் அவரது சித்தப்பா மகன் மூன்றாவது பல்லவராயன்
ஆட்சியைக்கைப்பற்றினார்.
அவர் தன்னுடைய ஆளுமையை இன்றைய கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் வரை நீடித்தார்.
பிற்காலத்தில் அவர்
மாறவர்மன் சுந்தரபாண்டியனால் ஒரு போரில் வீர மரணமடைந்தார்.
அவரோடு ஒய்சளர் ஆட்சி
ஒசூரில் முடிவுற்றது.
மூன்றாவது பல்லவ ராயன் மறைவுக்குப் பிறகு ராமநாத மன்னனின் அமைச்சர் பெல்லப்பா நாயக்கன் என்பவர் ஒசூர் ஆட்சி பொறுப்பேற்றார்.
பெல்லப்பா:-விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவிய ஹரிஹரா என்பவரின் தங்கையை பெல்லப்பா திருமணம் செய்தார்.
13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும், ஆவணங்களும் கோலார் நாட்டு அல்லது முரசு நாட்டு அரசன் அத்திமல்லன் ஒசூரை ஆட்சி செய்ததாக செப்புகின்றன.
அந்த"அழகியபெருமாள் அத்திமல்லன் காருவாண்டரசன்" என்பவன் திருபுவனமல்லன் பர்வதிராஜனின் மகன் என்றும் சில கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.
இந்த அத்திமல்லன் தான் பாகலூர்
பாளையக்காரர்களைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அவரது ஆளுகையின் போது தான் இன்றைக்கும் ஒசூரை சுற்றியுள்ள கிராமங்களான அத்திப்பள்ளி,அத்திமுகம்,
அத்திசத்திரம்,அத்திநத்தம்
ஆகியவை உருவாக்கப்பட்டு அவரது பெயரிலேயே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.
ஒசூரில் ஒய்சளர் ஆட்சி முடிவுற்றவுடன் விஜயநகரை நிர்மானித்த ஹரிஹரா என்னும் அரசன் தனது ஆட்சியினைப் பாண்டிய நாட்டு எல்லை வரை விரிவுபடுத்தினார்.
அதற்குள் ஒசூர் நாடும் அடங்கியது.
ஹரிஹராவிற்கு பிறகு பெணுகொண்டாவைச்சேர்ந்த அட்சுதராயன் என்ற அரசன் ஜெகதேவராயன் தான் விஜயநகர சாம்ராஜ்ய மாமன்னன்
கிருஷ்ண தேவராயரின் மருமகன் அளியராமராயரின் மகளை திருமணம் செய்து கொண்டவர்.
அவரது மனைவி நினைவாக இன்றும் ஜெகதேவி என்னும் ஊர் கிருட்டினகிரி அருகில் உள்ளது.
அதுதான் அவரது தலைநகராக செயல்பட்டது.
அவர் பிற்காலத்தில்
தனது தலைநகரை ராயக்கோட்டை,ரத்தினகிரி ஆகிய இடங்களுக்கு மாற்றினார்.
ஜெகதேவராயரிடமிருந்து
மைசூர் மகாராஜா ஸ்ரீகண்டீஸ்வர நரசிம்மராஜ உடையார் ஒசூர் நாட்டை கைப்பற்றினார்.
மைசூர் மகாராஜாக்களிடம் இருந்த ஒசூர் நகரை இரண்டாவது மைசூர் சண்டையின்போது "ஹைதர் அலி" கைப்பற்றினார்.
ஹைதர் அலி இறந்ததும் 'திப்புசுல்தான்" ஆளுகைக்கு ஒசூர் வந்தது.
திப்பு சுல்தான்
ஒசூரை ஆண்டபோது
சந்திர சூடேஸ்வரர் கோயிலை
செப்பனிட்டதாக அறியமுடிகிறது.
ஒசூர் கோட்டையையும் திப்பு சுல்தான்
புனர் நிர்மாணம்செய்துள்ளார்.
அவர் "ஹாமில்டன்"என்னும் மிகச் சிறந்த பொறியாளரை
ஒரு வழக்கில் பணயக்
கைதியாக்கி இருந்தார்.
அவர் மூலமாகத்தான் ஒசூர் கோட்டையை புனரமைப்பு செய்தார்.
திப்பு சுல்தானுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது.
அதன்படி ஒசூர்,கிருஷ்ணகிரி ஆகியவை "கார்ன்வாலிஸ்" தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது.
கார்ன்வாலீஸ் பிரபு கேப்டன் "காஸ்பி" மூலம் ஒசூரை ஆண்டார்.
காஸ்பிக்குப் பிறகு "பிரட்" என்பவர் ஒசூருக்குக் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
பிரட் கலெக்டராக ஆன பின் அவரது காதலியின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் உள்ள
"கெனில் ஒர்த்" கோட்டையை அப்படியே மறுபதிப்பாக ஒசூரில் நிர்மாணித்தார்.
இந்த காதல் மாளிகையும் ஹாமில்டன் என்ற அதே பொறியாளர்தான் கட்டினார்.
காதல் மாளிகையை எழுப்புவதற்காக அரசு பணத்தைக் கையாடல் செய்த குற்றத்துக்காக
கார்ன் வாலீஸ் பிரபுவால் கலெக்டர்" பிரெட்" பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தனது காதல்மாளிகை
"கெனில்வர்த்கோசலை" முழுமையாக முடிக்கப்படாமலேயே பிரெட் லண்டன் சென்றுவிட்டார்.
அதன்பிறகு "வால்டன் இல்லியட்லோக்கார்ட்" சேலம் கலெக்டராக பொறுப்போற்றார்.
அவர் தனது மனைவியுடன் காதல் மாளிகை கெனில்வர்த் கோசிலேயே குடியிருந்ததோடு அதை தனது அலுவலகமாக ஆக்கிக்கொண்டார்.
இல்லியார்ட் லோக்கார்ட்" அந்த காதல் மாளிகையிலேயே
உயிர் துறந்தார்.
அவரின் நினைவாக அவரது மனைவி
நிர்மாணித்த லோகார்ட்டின் நினைவு சின்னத்தை
இன்றும் கெனில்வர்த்கேசலின்
அருகில் காணலாம்.
சுதந்திர இந்தியாவில்
கெனில் ஒர்த் கோட்டை
என்னும் மாளிகை பலருக்கும் பங்கு போட்டு விற்கப்பட்டது.
மிகப்பெரிய சேதாரம்.
சுக்கு நூறாக உடைத்து விட்டனர்.
இப்போது அது வெறும் மண்கூடு.
பலப்பல வரலாற்று பின்னனிகளைக்கொண்ட ஒசூர்
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது.
குண்டூசி முதல் ஆகாய விமானம் வரை அனைத்துப் பொருள்களும் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் இருசக்கர,நான்கு சக்கர வாகனங்கள் இந்தியா முழுவதுமன்றி வெளிநாடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
மின்னனு சாதனங்கள், துணிவகைகள்,
மென்பொருள்கள்,
வன்பொருள்கள்,
கணினி வகைகள்,
மின்சார சாதனங்கள்,
உலகப்புகழ்பெற்ற கடிகாரங்கள்,
தங்க ஆபரணங்கள்,
மோட்டார்கள்,
பேரிங்குகள்
இன்னும் எத்தனையோ பொருட்கள் நாளும் உற்பத்தியாகி உலகம் எங்கும் செல்கின்றன.
நாட்டின் அனைத்து மாநில மக்களும்,
அனைத்துமொழி மக்களும் வாழும் நகரமாக இன்றைய ஒசூர் நகரம் விளங்குகிறது.
இந்த நகரத்திற்கு பெருமை சேர்க்கின்ற விதத்தில் அமைந்திருப்பதே மலையில் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் அருள்மிகு மரகதாம்பாள்
ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் திருக்கோயிலாகும்.
No comments:
Post a Comment