Wednesday, 24 October 2018

*சந்திப்பிழை அறிதல்:*

*சந்திப் பிழையை நீக்குதல்:*

வல்லின எழுத்துகள் ஆறு:
_க், ச், ட், த், ப், ற்_
இவைகளில்
_க், ச், த், ப்_ ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை.
_ட், ற்_ ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை. வல்லினம் வன்கணம் என்று அழைக்கப்படும்.
_க, ச, த, ப_ மிகவும் ஆற்றல் வாய்ந்த அந்த எழுத்துகள், வருமொழியில்(அதாவது இரண்டாவது சொல்) முதல் எழுத்தாக வரும்போது கூடுதலாக அதே மெய் எழுத்து மிகும்.
சான்று:
யானை + கால் = யானைக்கால்
யானை + சங்கிலி = யானைச்சங்கிலி
யானை + தந்தம் = யானைத்தந்தம்
யானை + பாகன் = யானைப்பாகன்
இவ்வாறு எழுதாமல் வல்லினம் மிகாமல் எழுதுவது சந்திப்பிழை ஆகும். சில சமயங்களில் வல்லினம் மிகாமலும் அமையும். வலிந்து நாம் வல்லின எழுத்துகளைச் சேர்க்க வேண்டியதில்லை.
வல்லின எழுத்துகளைச் சேர்ப்பதும், தேவையற்ற இடத்தில் நீக்குவதும் வேண்டும். இதுவே சந்திப்பிழைகளை நீக்கி எழுதுவதாகும்.
நாடி துடிக்கிறது – ஒருவருடைய கையின் நாடி துடிக்கிறது என்று பொருள்.
நாடித் துடிக்கிறது – விரும்பித் துடிக்கிறது என்று பொருள்.

*வல்லினம் மிகும் இடங்கள்:*
1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்(ஐ)
சான்று:
குழந்தையை + கண்டேன் = குழந்தையைக் கண்டேன்
பொருளை + தேடு = பொருளைத் தேடு
புலியை + கொன்றான் = புலியைக் கொன்றான்
நூலை + படி = நூலைப் படி

2. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்
சான்று:
வீட்டிற்கு + சென்றான் = வீட்டிற்குச் சென்றான்
கல்லூரிக்கு + போனான் = கல்லூரிக்குப் போனான்

3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ’அது’ மறைந்திருக்கும்
சான்று:
தாமரை + பூ = தாமரைப்பூ
குதிரை + கால் = குதிரைக்கால்

4. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.
சான்று:
குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்
வழி + சென்றார் = வழிச்சென்றார்

5. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த குற்றியலுகரம்)
சான்று:
பாக்கு + தூள் = பாக்குத்தூள்
தச்சு + தொழில் = தச்சுத்தொழில்
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
படிப்பு + செலவு = படிப்புச் செலவு
பற்று + தொகை = பற்றுத் தொகை

6. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.
சான்று:
இரும்பு + தூள் = இரும்புத் தூள்
மருந்து + கடை = மருந்துக் கடை
கன்று + குட்டி = கன்றுக்குட்டி

7. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் எ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.
சான்று:
அ + கடல் = அக்கடல்
இ + சிறுவன் = இச்சிறுவன்
உ + கடை = உக்கடை
எ + பாடம் = எப்பாடம்

8. சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த, எங்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
சான்று:
அந்த + கட்சி = அந்தக் கட்சி
இந்த + தமிழ் = இந்தத் தமிழ்
எந்த + சண்டை = எந்தச் சண்டை
எங்கு + கசி = எங்குக் கசி

9. அப்படி, இப்படி, எப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
சான்று:
அப்படி + சொன்னார் = அப்படிச் சொன்னார்
இப்படி + கடித்தது = இப்படிக் கடித்தது
எப்படி + தாவல் = எப்படித் தாவல்

10. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
சான்று:
நிலா + சோறு = நிலாச்சோறு
மலை + காற்று = மலைக்காற்று
பனி + துளி = பனித்துளி

11. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்
சான்று:
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ

12. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
சான்று:
சதுரம் + பலகை = சதுரப் பலகை
வட்டம் + பாறை = வட்டப் பாறை
பச்சை + பட்டு = பச்சைப் பட்டு

13. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
சான்று:
தேட + சொன்னார் = தேடச் சொன்னார்
வர + சொன்னார் = வரச் சொன்னார்
ஓடி + கடித்தது = ஓடிக் கடித்தது

14. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
சான்று:
கை + பற்றியது = கைப்பற்றியது
தை + திங்கள் = தைத்திங்கள்
மீ + பேருயிரி = மீப்பேருயிரி

15. ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
சான்று:
நன்றாய் + சாப்பிட்டார் = நன்றாய்ச் சாப்பிட்டார்
போய் + தேடு = போய்த் தேடு

16. இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
இனி + போகலாம் = இனிப் போகலாம்
தனி + சுவை = தனிச்சுவை
மற்று + கண்டவை = மற்றுக் கண்டவை
மற்ற + படங்கள் = மற்றப் படங்கள்
மற்றை + கூறுகள் = மற்றைக் கூறுகள்

17. என, ஆக எனும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்
சான்று:
என + சொன்னார் = எனச் சொன்னார்
ஆக + பேசினார் = ஆகப் பேசினார்
18. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
சால + சிறந்தவை = சாலச் சிறந்தவை
தவ + பெரியது = தவப் பெரியது

19. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.
சான்று:
ஓடா(த) + குதிரை = ஓடாக் குதிரை
அழியா(த) + சிறப்பு = அழியாச் சிறப்பு

20. தனிக்குறிலையடுத்து வரும் ஆ எனும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
சான்று:
பலா + சுளை = பலாச்சுளை
கனா + காலம் = கனாக்காலம்

21. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
சான்று:
திரு + குறள் = திருக்குறள்
பொது + கிணறு = பொதுக்கிணறு

22. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
சான்று:
தண்ணீர் + பந்தல் = தண்ணீர்ப் பந்தல்
மலர் + கரம் = மலர்க்கரம்

23. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
சான்று:
மரம் + பொந்து = மரப்பொந்து
இரும்பு + கம்பி = இரும்புக் கம்பி

24. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
சான்று:
சட்டை + பை = சட்டைப்பை
குடை + துணி = குடைத்துணி

25. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
சான்று:
அடுப்பு + புகை = அடுப்புப்புகை
விழி + புனல் = விழிப்புனல்

26. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
சான்று:
நிலா + பெண் = நிலாப்பெண்
மலர் + கண் = மலர்க்கண்

27. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்த்தொடர், நெடில் தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்
சான்று:
வயிறு + போக்கு = வயிற்றுப்போக்கு
முரடு + காளை = முரட்டுக்காளை
நாடு + பற்று = நாட்டுப்பற்று
காடு + தேன் = காட்டுத்தேன்

*வல்லினம் மிகா இடங்கள்:*
1. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
சான்று:
தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
தண்ணீர் + குடித்தார் = தண்ணீர் குடித்தார்
துணி + கட்டினார் = துணி கட்டினார்

2. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
சான்று:
தாய் + தந்தை = தாய் தந்தை
காய் + கனி = காய் கனி
செடி + கொடி = செடி கொடி

3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து, மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
நல்ல + பையன் = நல்ல பையன்
படித்த + பெண் = படித்த பெண்

4. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
சான்று:
தொழிலாளர் + தலைவர் = தொழிலாளர் தலைவர்
தாய் + கண்டித்தார் = தாய் கண்டித்தார்

5. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது.
சான்று:
முழங்கின + சங்குகள் = முழங்கின சங்குகள்
பாடின + குயில்கள் = பாடின குயில்கள்
வந்தது + கப்பல் = வந்தது கப்பல்

6. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது.
சான்று:
மூன்று + தமிழ் = மூன்று தமிழ் (பத்மினி பாடுறது கேட்கிறதா ;) )
ஒன்று + சொல் = ஒன்று சொல்
எட்டு, பத்து – வன்தொடர்க்குற்றியலுகரம் அதனால் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) ஒற்று வரும்

7. அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும் எது?, யாது? என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
சான்று:
அது + பறந்தது = அது பறந்தது
இது + போனது = இது போனது
எது + பார்த்தது = எது பார்த்தது?
யாது + சொல் = யாது சொல்?

8. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
சான்று:
அத்தனை + காய்கள் = அத்தனை காய்கள்
இத்தனை + கைகள் = இத்தனை கைகள்
எத்தனை + பூக்கள் = எத்தனை பூக்கள்

9. வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.
அவரா + பேசினார்? = அவரா பேசினார்?
இவரா + கேட்டார்? = இவரா கேட்டார்?
அவரே + போவார்? = அவரே போவார்?

10. சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
பல + பாத்திரங்கள் = பல பாத்திரங்கள்
சில + குடில்கள் = சில குடில்கள்

11. விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது.
சான்று:
கவிதா + கேள் = கவிதா கேள்
வேலா + பாடு = வேலா பாடு
வளர்க + தமிழ் = வளர்க தமிழ்

12. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
சான்று:
பாவை + போனாள் = பாவை போனாள்
எழில் + பேசினார் = எழில் பேசினார்

13. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
சான்று:
ஆடு + கொடி = ஆடுகொடி
விரி + கதிர் = விரிகதிர்
இடு + காடு = இடுகாடு

14. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.
சான்று:
பல + பல = பலபல
தீ + தீ = தீதீ

15. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
சான்று:
மூத்தோர் + சொல் = மூத்தோர் சொல்

16. அவை, இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
அவை + கத்தின = அவை கத்தின
இவை + பாடின = இவை பாடின

17. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது.
சான்று:
படிக்கும்படி + கூறினார் = படிக்கும்படி கூறினார்
நிற்கும்படி + சொன்னார் = நிற்கும்படி சொன்னார்

18. இரட்டைக் கிளவிகளில் வல்லினம் மிகாது.
சான்று:
கல + கல = கலகல
பள + பள = பளபள

19. அது, இது என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
சான்று:
அது + பார்த்தது = அது பார்த்தது
இது + சென்றது = இது சென்றது

20.எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
சான்று:
எது + கண்டது = எது கண்டது
யாது + சொன்னார் = யாது சொன்னார்

21. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது (இலக்கணமெல்லாம் நமக்குத் தானே அவியளுக்கு இன்னாத்துக்கு ;) )
சான்று:
சங்கீத + சபா = சங்கீத சபா
மகாஜன + சபா = மகாஜன சபா

22. சில வினையெச்சத் தொடர்களில் வல்லினம் மிகாது.
சான்று:
வந்து + சென்றார் = வந்து சென்றார்
செய்து + தந்தார் = செய்து தந்தார்

23. வல்லின றகர, டகரத்தின் பின் ஒற்று வராது (பெரும்பான்மையோர் செய்யும் தவறு இஃதே)
சான்று:
சரி : தவறு
கற்க : கற்க்க
விற்கப்படும் : விற்க்கப்படும்
கேட்கிறார் : கேட்க்கிறார்
வேட்பாளர் : வேட்ப்பாளர்
சொற்கள் : சொற்க்கள்
திராட்சை : திராட்ச்சை
அற்பம் : அற்ப்பம்
ஆட்கொல்லி : ஆட்க்கொல்லி
ஆட்படு : ஆட்ப்படு
உட்கருத்து : உட்க்கருத்து
உட்கார் : உட்க்கார்
உட்கொள் : உட்க்கொள்
உட்செலுத்து : உட்ச்செலுத்து
உற்சவம் : உற்ச்சவம்
ஏற்கனவே : ஏற்க்கனவே
ஏற்படுத்து : ஏற்ப்படுத்து
ஏற்போர் : ஏற்ப்போர்
கட்சி : கட்ச்சி
வலி மிகுதலும் மிகாமையும்:
‘பசி பிணி பகை இவை கரிகாலர் ஆட்சியில் இல்லை’
என்னும் சொற்றொடருக்கும்,
‘பசிப்பிணி, பகை இவை கரிகாலர் ஆட்சியில் இல்லை’
என்னும் சொற்றொடருக்கும் பொருளில் மிகுந்த வேறுபாடு உண்டு.
முதல் சொற்றொடரில் பசியும் பிணியும் பகையும் இல்லை என்பது பொருள். இரண்டாம் சொற்றொடரில் பசியாகிய பிணியும் பகையும் இல்லை என்பது பொருள்.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு வலி மிகுதலால் உண்டாகிறது.
ஓடா குதிரைகள் – குதிரைகள் ஓடாது
ஓடாக் குதிரைகள் – ஓடாத குதிரைகள்
இந்த வேறுபாட்டை உணர ஓரளவு இலக்கணம் அறிந்திருக்க வேண்டும்.

*_வல்லெழுத்து மிகுவதை நன்கு தெரிந்து கொள்வதற்குத் தொடர் இலக்கணம் இன்றியமையாதது._*
தொடர்: (இரண்டு சொற்களுக்குக் குறையாமல் தொடர்ந்து வருவது)
சான்று:
நாய் குரைத்தது
தொடர், தொகாநிலைத்தொடர் என்றும் தொகைநிலைத்தொடர் என்றும் இருவகைப்படும்.
தொகாநிலைத்தொடரைத் "தொடர்" என்றும்,
தொகைநிலைத்தொடரைத் "தொகை" என்றும் கூறுவர்.

இரண்டு சொற்கள் இருந்து பொருள் கொள்ளும் போது நடுவில் ஒன்றும் மறையாமல் இருந்தாலே அது *#தொகாநிலைத்தொடர்.*

இரண்டு சொற்கள் இருந்து பொருள் கொள்ளும்போது நடுவில் ஏதாவது மறைந்து வருவது *#தொகைநிலைத்தொடர்.*
நாய் குரைத்தது – இதில் எதுவும் தொக்கி (மறைந்து) நிற்கவில்லை. எனவே இது தொகாநிலைத்தொடர் எனப்படும்.

துணி கிழிந்தது – தொகாநிலைத்தொடர்
துணி(ஐ) கட்டு – தொகைநிலைத்தொடர்
துணி கிழிந்தது – இஃது எழுவாய்த் தொடர்.
எழுவாய் தொடரில் பெரும்பாலும் வல்லெழுத்து மிகாது.
ஓடா குதிரைகள் – இது வினைமுற்று தொடர் வினைமுற்று முதலில் இருப்பதால் இது வினைமுற்றுத் தொடர். வினைமுற்றுத் தொடரில் வல்லெழுத்து மிகாது. ஓடாக் குதிரைகள் என்னும் தொடரைப் பெயரெச்சத் தொடர் என்போம்.
தொகைநிலைத் தொடரானது சொற்சுருக்கத்துக்காக அமைவது. சொற்களின் சிக்கனத்திற்காகவும் புதுச் சொற்களை உருவாக்கிக் கொள்வதற்காகவும் நம் முன்னோர்கள் தொகைநிலைத் தொடர்களை அமைத்துள்ளனர்.

செடிகொடிகள் – உம்மைத்தொகை (நடுவில் உம் மறைந்திருப்பதால்)
யானை குதிரை
உம்மைத்தொகையில் வல்லெழுத்து மிகாது.
வேற்றுமைத்தொகையில் இருவகை உண்டு.
உருபு மட்டும் மறைந்து வருந்தொகை:
(ஆறாம் வேற்றுமைத் தொகையில்) முதலில் நிற்கும் சொல் அஃறிணையாக இருக்குமேயானால் வல்லெழுத்து மிகும்.
சான்று:
வையைக்கரை

ஆனால், நிலைமொழி உயர்திணையாக இருந்தால் வல்லெழுத்து மிகாது.
சான்று:
தம்பி சட்டை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை:
சான்று:
யானைப்பாகன் - ’ஐ’ உருபும், ’ஓட்டும்’ என்ற பயனும் மறைந்திருப்பதால், உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
சிற்றுண்டிச்சாலை, மலர்ச்சோலை, செய்தித்தொகுப்பு, தங்கக்காப்பு, பயணச்சீட்டு, கரும்புச்சாறு, வாய்ச்சொல், மலைப்பாம்பு, மதுரைத் தமிழ்ச்சங்கம், கொம்புத்தேன், மலைக்குகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
சிறப்புப் பெயரும் பொதுப்பெயரும் இருந்து ‘ஆகிய’ என்பது மறைந்து (தொக்கி) வருவது.
சான்று:
மல்லிகைப்பூ, தைத்திங்கள்
சுருக்கமாக…
1. வன்தொடர்க் குற்றியலுகரத்திற்குப் பின்
2. அகர இகர வினையெச்சத்தின் பின்
3. 2ஆம் 4காம் வேற்றுமை உருபிற்குப் பின்
4. ஆறாம் வேற்றுமைத் தொகையில்
ஆகிய இடங்களில் வல்லெழுத்து மிகும்.

1. வினைத்தொகையில்
2. உம்மைத்தொகையில்
3. பெயரெச்சத்தில்
ஆகிய இடங்களில் வல்லெழுத்து மிகாது.
தமிழில் மேற்கண்ட இடங்களில் மட்டுமே வல்லெழுத்து மிகுமா மிகாதா என்ற ஐயம் வரும். மீதி இடங்களில் பலுத்தலிலேயே(உச்சரிப்பிலேயே) தெளிவாகப் புலப்படும்.
அப்படியும் சிலருக்கு ஐயம் வரும் சில சொற்கள்…
எழுத்துகள், வாக்குகள், வாழ்த்துகள், இனிப்புகள், விளக்குகள், விளையாட்டுகள்
விகுதிப் புணர்ச்சியில் (விகுதி + கள்) வல்லெழுத்து தோன்றுவதற்கு இடமில்லை என்று உரைத்தால் யாவரும் செவி கொடுக்க மறுக்கிறார்கள்..!

கற்றதில் பற்றியது..🙏🏽
தமிழை பிழையின்றி கடத்துவோம்💪🏾

வாழும் நம் தமிழ்🙏🏽😇

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...