பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1. தமிழ் வினாக்கள்
.பதிவு 2.
உமணர்கள்- குறிப்பு வரைக ( 50 சொற்கள் 2011 )
உப்பு வாணிகர்களே உமணர்கள் ஆவர். மாட்டுவண்டியில் ஏற்றிச் சென்று விற்பனை செய்தனர். கூட்டமாகச் சென்றனர் ஆகையால் கணம் சால் உமணர் எனப்பட்டனர். மாற்று எருதுகளையும் சேம அச்சுக்களையும் கொண்டு சென்றனர் மாடுகளின் கழுத்தில் மணி கட்டியிருந்தனர். முடம்பட்ட எருதுகளை வழியிலேயே விட்டுச் சென்றனர். நெல்லின் நேரே வெண்கல் உப்பு என்று கூவி விற்றனர். இலக்கியமும் கல்வெட்டும் இந்தச் செய்தியைத் தருகின்றன.உப்பு வண்டிகள் சென்ற தடம் அழுந்தி இருந்தது இது ஒழுகை என்று இலக்கியத்தில் உள்ளது.
(கடல் விளை அமிழ்து உப்பு- என்று சங்க இலக்கியம் கூறும். இது விளைவிக்கபட்டஇடம் அளம் எனப்பட்டது. பேராளம் கோவளம் என்று இன்றும் அளத்தின் பெயரில் ஊர்கள் உண்டு.மன்னன் பெயரோடு இந்த ஊர்கள் இருந்தன. பண்டம் மாற்றுப் பொருளாதாரத்தில் உப்புக்கு மிகு விலை இருந்தது. நெல்லும் உப்பும் ஒரேவிலை என்று “ கூவி ‘ விற்றனர் என்று சொல்லும்போது ஒருவேளை நெல்லை விட உப்பு அதிக விலைக்கும் விற்று இருந்ததோ என நினைப்பதையும் தடுக்க முடியவில்லை. இரங்கல் ஆகிய உரிப்பொருளுக்குரிய நெய்தல் திணைக்கு உரிய மக்களுக்கு மருத நிலமக்காளாகிய மகிழ்நர் கொடுத்த உயர் நிலையையும் நினைக்கலாம் தானே. உப்பு என்ற சொல்லில் இருந்துதான் பிற சுவைப் பெயர்கள் தோன்றின என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் கசப்பு இனிப்பு துவர்ப்பு கார்ப்பு புளிப்பு போன்ற சொற்களைக் காண்க. இது பற்றிச் சிந்திக்கும்போது எனக்குச் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. உ என்பது உயரத்தைக்குறிக்குமொரு சுட்டு .பு என்பது பண்புப் பெயர் விகுதி உ + பு = உப்பு ஆயிற்று உயரம் உம்பர் முதலியவற்றைக் காண்க. உ, மண், அர்- உமணர் உய்ர்ந்த மண்ணுக்கு உரியவர் என்று கூறலாம் என்று தோன்றுகிறது. எருது களைத்தாலோ முடம்பட்டாலோ மாற்று எருதுகளையும், அச்சு முறிந்தால் மாற்று அச்சுக்களையும் எடுத்துச் சென்று இருக்கின்றனர் என்னும்போது தற்காலம் ஸ்டெப்னி எனப்படும் மாற்றுக்கருவி எடுத்துச் செல்லும் வழக்கம் நமக்கு நினைவுக்கு வருகிறது அல்லவா. ஒழுகை - ஒழுங்கை என்பது ஒழுங்கான பாதை என்று பொருள்படும் பட்டுக்கோட்டை வட்டார வழக்கு )
No comments:
Post a Comment