வேலூர் கத்தரிக்காய் என்பது ஒரு புகழ் பெற்ற சொல்,வேலூர் மாவட்டக் கிராமங்களில் விளைவிக்கப்படும் இதற்கு முள்ளுக் கத்தரிக்காய் என்பது மறு பெயர். உண்மையில் அதில் முள் இருக்கும். அதன் சுவையும் ஒப்பிட இயலாதது. இது ஒரு கலப்பினமற்ற பாரம்பரிய காய். இதில் சொத்தை இருக்கும். புழு கூட இருக்கும். சொத்தையை அறுத்து விலக்கிவிட்டுச் சமைப்பார்கள். இப்போது ஆர்கானிக் ஆர்கானிக் என்று கூறப்படும் பல காய்களுக்கு இடையில் இயற்கையான இது சப்தமில்லாமல் விற்கப்படுகின்றது.
வேலூரில் இஸ்லாமிய நண்பர்களின் வீட்டுப் பிரியாணியைச் சுவைத்தவர்கள் முள்ளுக்கத்தரிக்காய் வதக்கலை மறந்திருக்க மாட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள். அந்த பிரியாணிக்கு அந்த கத்தரிக்காய்த் தொக்கு… சொல்ல முடியாது.. ஈடு இணையற்ற காம்பினேஷன் அது. கத்தரிக்காயின் சுவை…பிரியாணியின் சுவையை மீறிய சுவை அது. நான் இன்று சைவனாக மாறிவிட்டேன். ஆனாலும் அந்தக் கத்தரிக்காய்த்தொக்கு மட்டும் என்னை ஏங்க வைக்கின்றது. இன்னமும் அந்த பார்முலா மட்டும் தெரியவில்லை.
பணி காரணமாகச் சென்னைக்கு வந்து வசிப்பவர்கள் இன்றும் வேலூருக்குப் போனால் முள்ளுக்கத்தரிக்காயை ஒரு பண்டமாக வாங்குவதைச் சாதாரணமாகக் காணலாம். சென்னை மக்களுக்கு மட்டுமே இது வேலூர் கத்தரிக்காய் (சென்னை சூப்பர் மார்க்கெட்டுகளில் அவ்வப்போது இது வருகை புரியும். ஆங்கிலத்தில் Brinjal – Vellore என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள்). ஆனால் வேலூரில் இது இலவம்பாடி கத்தரிக்காய் என்றுதான் கூறப்படுகின்றது.
இது ஏன் இன்று என் நினைவுக்கு வந்தது என்றால் அதற்கும் கலைஞர்தான் காரணம்.
உழவர் சந்தை ஆரம்பித்த காலம். வேலூரில் (காட்பாடி காய்கறி அங்காடி என நினைக்கிறேன்) இவர்தான் திறந்து வைக்கின்றார். திறந்து வைத்துவிட்டுப் பேசிய பின் ஒரு உழவரிடத்தில் போய் கேட்கின்றார்… “இலவம்பாடி கத்தரிக்காய் இல்லையா?”. பை நிறைய வாங்கிவிட்டு நூறு ரூபாயைக் கொடுக்கின்றார்.
இதைக் கேள்விப்பட்டதும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனேன். என்ன நினைவாற்றல்! பலராலும் வேலூர் கத்தரிக்காய் என்று அறியப்பட்டு, வேலூர் மக்களால் மட்டுமே இலவம்பாடி கத்தரிக்காய் என்று கூறப்படும் ஒரு காயை தமிழக முதல்வர் நினைவில் வைத்துள்ளார் என்றால் அவருக்குத் தமிழகத்தின் புவியியல் அத்துபடியாக இருக்கவேண்டும் என்றே தோன்றியது.
தமிழகத்தின் அமைப்பு வரலாறு, புவியியல், மக்கள் தன்மை எனப் பலவற்றையும் விரல் நுனியில் வைத்திருந்த முதல்வர்கள் இருவர்.. ஒருவர் காமராஜர் மற்றவர் கலைஞர்.
No comments:
Post a Comment