Saturday, 24 December 2022

Dec_24/24-12-2022_*தேசிய நுகர்வோர் தினம்

_*"தேசிய நுகர்வோர் தினம்" நமக்கான அடிப்படை உரிமைகள்.... மறுக்கப்பட்டால் என்ன செய்யலாம்....?*_

*_24-12-2022_*
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்றைய பதிவில் நுகர்வோர் உரிமைகள் பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.






 *நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்* 

1986 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. 

இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 24 அன்று நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இத்தினத்தின் முக்கிய நோக்கம் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

 *நுகர்வோருக்கான உரிமைகள்* 

• தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும்  உரிமை .

• ஆபத்து நிறைந்த பொருட்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

• பொருட்களின் தரத்தையும் செயல்பாடு பற்றியும் தெரிந்து கொள்வதற்கான உரிமை.

• நுகர்வோர் தங்களின் நலன் தொடர்பாக முடிவு எடுக்கும் போது கேட்கப்படும் உரிமை.

• நுகர்வோர் தங்களுக்கான உரிமைகள் மீறப்படும் சமயத்தில் அதற்கு தீர்வு பெறும் உரிமை.

• நுகர்வோர் கல்வியை கற்றுக் கொள்வதற்கான உரிமை.

 *நுகர்வோர் குறைதீர் ஆணையம்* 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு தேசிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டது. 

இந்த ஆணையத்தில் இதுவரை 54,85,267 புகார்கள் இந்தியா முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இங்கு பதிவு செய்யப்பட்ட புகார்களில் 90 சதவீதம் புகார்களுக்கு தீர்வுகளும் காணப்பட்டுள்ளது.

 *எப்போது புகார் அளிக்கலாம்?* 

• குறிப்பிடப்பட்ட எடையை விட குறைவான அளவு விற்பனை செய்தல்

• கலப்படம் நிறைந்த பொருள் விற்பனை செய்யப்படுதல்

• தேவையற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்தல்

• குழந்தைகளை இலக்காக வைத்து தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் செய்தல்

• பொருட்கள் காலவதியான பிறகும் விற்பனை செய்தல்

 *புகார் அளிக்கும் முறை* 

நுகர்வோர் தாங்கள் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் தரம் மற்றும் சேவை குறைபாடு இருப்பதை உணர்ந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி புகார் அளிக்க முடியும்.

புகார் அளிக்கும்போது மனுவில் புகார்தாரரின் பெயர், முகவரி, எதிர் மனுதாரரின் பெயர், அவரது முகவரி, தாங்கள் வாங்கிய பொருள் அல்லது சேவை, புகாருக்கான காரணம், பொருள் வாங்கிய ரசீது, நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் விவரம் போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு இருக்க  வேண்டும்.

 *புகார் கட்டண விபரம்* 

புகார் செய்யவும் வழக்கு தொடரவும் தகுதி இல்லாத காரணங்களை கொண்டு நுகர்வோர் குறைதீர் மன்றத்தை சிலர் அணுகியதாலும் இந்த சட்டத்தை வைத்து எதிர்மனுதாரரை மிரட்டியதாலும் இதனால் எதிர் தரப்பினருக்கு தேவையற்ற கால விரயம் மற்றும் செலவு ஏற்பட்டதாலும் 2006 ஆம் ஆண்டு முதல் புகார் அளிக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த புகாருக்கான கட்டணம் நுகர்வோர் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. அவை,

• 1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை 200 ரூபாய்

• 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை 400 ரூபாய்

• 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை 500 ரூபாய்

 *நுகர்வோர் நீதிமன்றம்* 

ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைய பெற்றுள்ளன .அதேபோன்று சென்னை மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதிமன்றம் அமைந்துள்ளது. 

மாவட்ட குறைத்தீர் மன்றத்தில் தங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

அங்கும் நுகர்வோருக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தையோ அல்லது உச்சநீதிமன்றத்தையோ நுகர்வோர்கள் அணுகி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை பெற முடியும்.

 *மேலும் சில தகவல்கள்* 

• இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினாலும் ஜம்மு காஷ்மீரில் இச்சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் பொருந்தும்.

• ஒரு பொருளை வாங்கிய நுகர்வோர் அதனை லாபம ஈட்டும் நோக்கத்தில் விற்பனை செய்தால் அவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

• ஒருவருக்கு இலவசமாக பொருட்கள் கொடுக்கப்பட்டு அதில் குறைபாடுகள் இருந்தால் அப்போதும் இந்த சட்டம் பொருந்தாது.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...