ஜூன் 14,
வரலாற்றில் இன்று.
சே குவேரா எனும் விடுதலைப் போராளி பிறந்த தினம் இன்று.
இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது.
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைக்கு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.
முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதப்படும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவக் கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைது செய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.
பொதுவாக தென் அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும் சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்து கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பின்னணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார்.
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.
பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன் பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.
ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்பிரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்
கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே குவாரோவை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாக கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைப்பட்ட இனத்திற்காக உழைத்துக்
கொண்டிருப்பான்".
மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி. கியூபா
அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூபா உறவுகள் தொடரவேண்டும் என்றார்.
இலங்கைக்குச் சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர் அவர்தான்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடப்பட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்கும் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை, ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."
அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.
சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.
அக்டோபர் 9, 1969... அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துக் கொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபப்பட்டு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறை வைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளிக்கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"
சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.
எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காக போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூபா மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோகக்கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுவின் சிலுவைக் காட்சியினை கண்முன் நிறுத்திற்று" என சொல்லி, பின்னர் கதறி அழுதான்.
அது நிதர்சனமான உண்மை.
ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்"
ஆஸ்துமா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"
இன்று அவரின் பிறந்த தினம். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.
*ஜூன் 14,
வரலாற்றில் இன்று.*
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறந்த தினம் இன்று.
* அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்பவனாக திகழ்ந்தவர். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக உள்ளார்.
* அவரின் முழுப்பெயர் டொனால்டு ஜான் டிரம்ப், 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்தார்.
* ட் டிரம்ப், மேரி மெக்லியோட் டிரம்ப் தம்பதியின் ஐந்து பிள்ளைகளில் ஒருவர் டொனால்டு டிரம்ப்.
* பதிமூன்று வயது டிரம்ப்புக்கும் தந்தைக்கும் ஒத்துவராததால், நியூயார்க்கின் ராணுவக் கல்விக் கழகத்தில் சேர்க்கப்பட்டார்.
* பாதத்தில் “Heel Spurs” எனும் எலும்பு தூக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினை இருந்ததால், வியட்நாம் போரில் பங்கேற்பதிலிருந்து டிரம்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
* நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை 1968ம் ஆண்டு படித்து முடித்தார்.
* 1968ஆம் ஆண்டு தந்தை கொடுத்த ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு தொழில் தொடங்கினார் டிரம்ப்.
* டிரம்புக்கு மூன்று திருமணங்கள், ஐந்து பிள்ளைகள்.
* பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம் என பல முகங்கள்
* நியூயார்க்கில் உள்ள 17 கட்டடங்களில் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை அல்ல.
* இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலராகும்.
* ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறந்த டிரம்ப், தொலைக்காட்சி களிலும் பிரபலமானவராக திகழ்ந்தார்.
* 1987ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றாலும் 1999ம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார்.
* பின்னர், 2009ம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ம் ஆண்டு வரை அதில் நீடித்தார்.
* 1987ம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக்கட்சியிலும்.
1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து டிரம்ப் பணியாற்றியுள்ளார்.
* இதற்கிடையே 2012ம் ஆண்டு மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து 2016ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக போட்டியிட்டு வென்று, அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
* 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியுற்றார் ட்ரம்ப்.
*ஜூன் 14,
வரலாற்றில் இன்று.*
டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்க ஸ்டெபி கிராப் பிறந்த தினம் இன்று.
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். 1999 ஆகஸ்ட்டில் ஓய்வு பெற்றார். அக்டோபர் 22, 2001 இல் ஆன்ட்ரே அகாசியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
* மேற்கு ஜெர்மனியின் மன்ஹேய்ம் (Mannheim) நகரில் (1969) பிறந்தார். தந்தை பழைய கார் விற்பனையாளர். அவர் வீட்டிலேயே தன் 3 வயது மகள் ஸ்டெஃபிக்கு டென்னிஸ் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். 4 வயதில் டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி பெறத் தொடங்கிய சிறுமி, 5 வயதுமுதல் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டாள்.
* டென்னிஸ்தான் அவள் சாதிப்பதற்கு ஏற்ற துறை என்பதை ஊகித்த பெற்றோர் 13 வயதில் பள்ளியில் இருந்து நிறுத்தினர். வீட்டில் ஒரு ஆசிரியர் மூலம் உயர்நிலைக் கல்வி கற்றாள்.
* முழுமையான தொழில்முறை வீராங்கனையாக 1983-ல் விளையாடத் தொடங்கினார். அப்போது, உலக டென்னிஸ் தரவரிசையில் அவரது இடம் 124. அதே ஆண்டு இறுதியில் 98, அடுத்த ஆண்டில் 22 என அதிரடியாக முன்னேறி, 1985-ல் 6-வது ரேங்க் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
* பிரபல சாம்பியன்கள் மார்ட்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட்டுக்கு சவாலாக முன்னேறினார் கிராஃப். அவர்களுடன் மோதி வெற்றி பெறவில்லை என்றாலும், அரையிறுதி, இறுதிப் போட்டிகள் வரை முன்னேறினார்.
* உலக மகளிர் டென்னிஸ் போட்டியில் 1986-ல் முதன்முதலாக கலந்துகொண்டபோது, கிறிஸ் எவர்ட்டை தோற்கடித்தார். அதன் பிறகு, எவர்ட்டிடம் இவர் ஒருமுறைகூட தோற்றதில்லை.
* இவரது டென்னிஸ் ஆட்டம் 1987-ல் மேலும் வலுப்பெற்றது. ஆரம்பத்திலேயே பிரெஞ்ச் ஓபன் போட்டிக்கு முன்னால் 6 போட்டிகளில் வென்றார். மியாமி போட்டியில் நவரத்திலோவாவை அரையிறுதியிலும், கிறிஸ் எவர்ட்டை இறுதிப் போட்டியிலும் வென்றது இவரது சாதனை வெற்றிகள். பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் செபாட்டினியையும், இறுதியாட்டத்தில் மார்ட்டினாவையும் தோற்கடித்தார்.
* ஆஸ்திரேலியன் ஓபன், டெக்சாஸ், சான் ஆன்டோனியோ போட்டிகளில் வென்றதோடு, மியாமி போட்டி பட்டத்தையும் 1988-ல் தக்கவைத்துக்கொண்டார். அந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டி பட்டங்களையும் அத்துடன் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இதன்மூலம் ‘காலண்டர் இயர் கோல்டன் ஸ்லாம்’ அந்தஸ்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே டென்னிஸ் நட்சத்திரம் என்ற பெருமையையும் பெற்றார்.
* மொத்தம் 7 விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்கள், 6 பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பட்டங்கள், 5 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி பட்டங்கள், 4 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டி பட்டங்களை வென்றுள்ளார்.
* தொடர்ந்து 186 வாரங்களுக்கு முதலிடத்தில் இருந்தவர். 11 இரட்டையர் போட்டிகளில் வென்றுள்ளார். 1999-ல் ஓய்வு பெறும்போது உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருந்தார். பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசியை 2001இல் திருமணம் செய்துகொண்டார்.
* பல விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர், ‘சில்ரன் ஃபார் டுமாரோ’ என்ற தொண்டு அமைப்பை நிறுவி போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
*ஜூன் 14,
வரலாற்றில் இன்று.*
ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணரும், தலைசிறந்த நரம்பியல் மருத்துவருமான அலாய்ஸ் அல்சீமர் (Alois Alzheimer) பிறந்த தினம் இன்று.
* ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள மார்க்பிரைட் என்ற கிராமத்தில் (1864) பிறந்தார். தந்தை சொந்த ஊரில் ஒரு வழக்கறிஞரிடம் பணிபுரிந்து வந்தார். தலைசிறந்த ராயல் ஹ்யுமானிஸ்டிக் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார்.
* இளம் பருவத்திலேயே அறிவியலில் நாட்டம் கொண்டார். மருத்துவக் கல்வியிலும் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிக் கல்விக்குப் பிறகு அஷ்பென்பர்க், டுபிங்கன், பெர்லின், வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகங்களில் பயின்று 1887-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பிறகு பிராங்க்பர்ட்டில் பல மருத்துவமனைகளில் பணியாற்றினார்.
* மருத்துவராக, பேராசிரியராகப் பணியாற்றினாலும் நோயியல் குறித்த ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நுண்ணோக்கியைப் பயன்படுத்தி நரம்பு நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பிரபல உளவியல் நிபுணர்கள், நரம்பியல் விஞ்ஞானிகளுடன் இணைந்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* மூனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர், உடற்கூறியல் ஆய்வக நிறுவனத்தில் பேராசிரியராகவும், அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். விரைவிலேயே சிறந்த ஆராய்ச்சியாளராக அறியப்பட்டார். தனது தொடர் ஆராய்ச்சிகள் வாயிலாக, ஐரோப்பாவின் நுண்திசு நோய்க் கூறியலின் (Histopathology) முன்னணி நிபுணராகப் புகழ்பெற்றார்.
* லுட்விக் மாக்ஸ்மில்லியன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, பிரெட்ரிக்-வில்ஹெம் பல்கலைக்கழகத்தின் நரம்பியல், உளவியல் துறையிலும், ரெக்லாவ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். மாணவர்கள் போற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தார்.
* பிராங்க்பர்ட்டில் உள்ள மனநோய் மருத்துவமனையில் எமில் கிரேப்ளின் என்ற பிரபல ஜெர்மன் உளவியல் நிபுணரின் நட்பு கிடைத்தது. பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, மறதியால் அவதிப்பட்ட ஒரு பெண்ணைச் சந்தித்தார். அந்த நோய் குறித்து ஆராயத் தொடங்கினார்.
* அந்தப் பெண் இறந்ததால், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மூளையை தனியே பிரித்தெடுத்து அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தார். பிரேதப் பரிசோதனை நடைபெற்ற 320 நோயாளிகளின் நோயியல், உடற்கூறியலை ஆராய்ந்து, ஏறக்குறைய 7 ஆண்டுகள் இதுசம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியில் அந்த நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்தார்.
* மூளையில் அவரால் கண்டறியப்பட்ட இந்த முரண்பாடுகள் பின்னாளில் அல்சீமர் நோய்க்கான அறிகுறிகளாக கருதப்பட்டன. மூளை நோய்க் குறியியல் மற்றும் முதுமை அறிகுறிகள் குறித்து 1906-ல் விரிவுரையாற்றினார். தன் ஆராய்ச்சியில் கண்டறிந்தவற்றையும் அதுகுறித்த தனது விரிவுரையையும் கட்டுரையாக வெளியிட்டார்.
* மருத்துவ உலகில் புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு ‘அல்சீமர்’ என்று தனது நண்பரின் பெயரையே வைத்து, அந்த நோயை 1910-ல் உலகுக்கு அறிமுகம் செய்தார் இவரது நண்பர் எமில். அதற்கான சிகிச்சை முறைகளையும் அலாய்ஸ் அல்சீமர் கண்டறிந்தார். மறதி நோய் மட்டுமல்லாது மூளையில் ஏற்படும் கட்டி, கைகால் வலிப்பு, மூளையின் வாஸ்குலார் நோய்கள், ஆரம்பகால முதுமை, மறதி உள்ளிட்ட நரம்பு தொடர்பான நோய்களைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
* ‘நரம்பியல் நோய்களின் தந்தை’ எனப் போற்றப்பட்டார். மனித குலத்தின் நலனுக்காக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மருத்துவம், உளவியல் களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கிய அலாய்ஸ் அல்சீமர் 51ஆவது வயதில் (1915) காலமானார்.
*ஜூன் 14,
வரலாற்றில் இன்று.*
ரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த தினம் இன்று.
* ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் (1868) பிறந்தார்.
சட்ட வல்லுநர், பத்திரிகையாளர், செய்தித்தாள் வெளியீட்டாளரான தந்தை, இவர் 6 வயது குழந்தையாக இருந்த போது இறந்தார். அதன் பிறகு, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
* பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, பட்டம் பெற்றார். இறுதியாண்டு பயிலும் போதே உயிரி ரசாயன ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார். வேதியியல் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள சோதனைக் கூடங்களில் 5 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
* மீண்டும் வியன்னா திரும்பி, பொது மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். வியன்னா ஹைஜீன் நிறுவனத்தில் 1896இல் உதவியாளராகச் சேர்ந்தார். நோய் எதிர்ப்பாற்றல் செயல்பாடு, இயற்கை எதிர் உயிரிகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.
* வியன்னா பல்கலைக்கழகத்தின் நோயியல், உடற்கூறியல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அங்கு நோயின் தன்மைகள் குறித்து ஆராய்ந்தார். தனியாகவும், பல அறிவியலாளர்களுடன் இணைந்தும் ஆராய்ச்சிகள்
மேற்கொண்டு 75 கட்டுரைகளை வெளியிட்டார். நோய் எதிர்ப்பாற்றல் காரணி களைக் கண்டறிந்து அதற்கு ‘ஹாப்டன்ஸ்’ எனப் பெயரிட்டார்.
* வெவ்வேறு நபர்களின் ரத்தத்தைக் கலக்கும்போது அவற்றில் வேறுபாடுகள் இருப்பதை 1901இல் கண்டார். இதுகுறித்து மேலும் ஆராய்ந்ததில் ஏ, பி, ஓ ஆகிய ரத்த வகைகள் இருப்பதையும் முதன்முதலாகக் கண்டறிந்தார்.
* இர்வின் பாப்பருடன் இணைந்து 1909இல் போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்தார். அதன் தொற்றுத் தன்மையைக் கண்டறிந்தார். இதுதான் போலியோவுக்கு மருந்து கண்டறிய அடிப்படையாக அமைந்தது. இதற்காக இவருக்கு 1926இல் ‘அரோன்சன்’ பரிசு கிடைத்தது. லாஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்களையும் பெற்றார்.
* ரத்த சிவப்பணுக்கள் தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். ரத்தப் பிரிவுகள் குறித்த ஆராய்ச்சியை மீண்டும் தொடர்ந்தார். முதல் உலகப் போருக்குப் பின்னர் நாட் டின் பொருளாதாரம் சீர்குலைந்ததால், தனது ஆராய்ச்சிகளை
தொடர்வதற்காக ஹாலந்து சென்று ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார்.
* வருமானத்துக்காக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அப்போதும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவற்றை டச்சு ராயல் அறிவியல் அகாடமி வெளியிட்டது. அங்கு ஆராய்ச்சிகளுக்கு பெரிதாக வசதி வாய்ப்புகளோ, பொருளாதார வளமோ இல்லாததால் ராக்ஃபெல்லர் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிய நியூயார்க் சென்றார்.
* நோய் எதிர்ப்பாற்றல், ஒவ்வாமை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். 1927இல் மேலும் பல புதிய வகை ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்தார். இந்த ஆராய்ச்சிக்காக 1930இல் இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* நோயியல், உடற்கூறியல், தசை திசுக்கள், நோய் எதிர்ப்பாற்றல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 75இவது வயதில் (1943) காலமானார்.
No comments:
Post a Comment